உத்தமவில்லன் – உத்தம பார்வை I !

சினிமா, விமர்சனம்

திரைப்படம் என்பது எப்போதும் புனைவே. வெறும் செய்திகள் சேகரிப்பு அல்ல. அவை ஆவணப்படம். புனைவு என்பது செய்திகளைக் கோர்க்கும் ஒரு மாலை. முத்துக்கள் தனியாக சிதறிக் கிடக்கையில் அவற்றைக் கோர்க்கும் அந்த புனைவே ஒரு அணியாகிறது. திரைப்படத்திற்க்கு திரைக்கதையே காட்சிகள் என்னும் முத்துக்களைக் கோர்த்துத் தொகுக்கும் மாலை ! அப்படி அழகாக கோர்க்கப்பட்ட மாலையாக மட்டுமே உத்தம வில்லனின் திரைக்கதை உள்ளது.

சிலருக்கு அவற்றைக் கோர்வையாகப் புரிந்து கொள்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம். நெடுங்காலமாக திரைப்படங்களின் ரசிகனாக இருந்து வருவதாலும், மாற்று சினிமாக்களை, புதிய முயற்சிகளைக் கண்டு ரசித்து வியந்து வருவதாலும் எனக்குள் ஏற்பட்ட பார்வைகளைத் தொடர்ந்து, பலர் வெளியில் பேச தவறியவற்றை பேசி வருகிறோம். அவற்றில் கமல்ஹாசன் எழுதிய ஆளவந்தான், ஹேராம், அன்பே சிவம் மற்றும் விருமாண்டி திரைப்படங்களில் கவனிக்கப்படாத சில நுட்பங்கள் திரைக்கதை அடிப்படையிலும் சினிமா கருத்தின் (Ideology of cinema) அடிப்படையிலும் ஏற்கனவே பல தளத்தில் விவாதித்துள்ளோம்.

அவற்றிற்கு நண்பர்கள் அளித்த ஊக்கங்களுக்கும், வரவேற்பிற்க்கும் நன்றிகள். இந்நிலையில் உத்தமவில்லன் இந்த வரிசையில் சேர்க்கப்படவேண்டிய தரமான ஒரு சிறந்த , புதுமையான திரைக்கதை முயற்சியாகும். ஆனால் இணையதள அவசர இடுகைகளில் சிலர் இதைப் பற்றிய தவறான கண்ணோட்டங்களை முன்வைக்கிறார்கள். சிலர் அதை போற்றித் தொடர்கிறார்கள் கண்மூடித்தனமாக. இவர்கள் உத்தம வில்லன்  First Poster வெளியான நாளே (ஒரு ப்ரெஞ்ச் ஃபொடாகிராபரைக் காப்பி அடிக்கிறார் கமல் என்கிற ரீதியில்) தன் எதிர்ப்பை காட்டத் தொடங்கியவர்கள்.

இவர்கள் அவசர கதியில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள். இவர்கள் நினைத்தவாறு இதன் காப்பி அதன் திருட்டு என்று சொல்ல உத்தம வில்லனில் ஏதும் கிடைக்கவில்லை. (இரணிய நாடகம் கம்பராமாயணத்தில் வரும் இரணிய வதைப் படலத்தின் நீட்சி! அது இவர்களுக்கு காப்பியாகத் தோன்றதற்கு வேறு காரணம் !). அதனால் அந்த 8ம் நூற்றாண்டு சூர மொக்கை, அதெல்லாம் காமெடியா என்றும் அந்த பாகம் இல்லாவிட்டால் இது சர்வதேச படமாகியிருக்கும் என்றும் பரிதாபத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரி ! வில்லத்தனமாய் விமர்சிப்பவர்களை விட்டுவிடுவோம் ! உண்மையைப் புரிந்து கொள்ள தயாராகாமல் கோஷம் போடுவோரை மறந்துவிடுவோம் ! தர்க்கம், தகவல், முழுமை என்ற கோணங்களில் ஒரு படத்தை ரசித்து அதனை முற்றும் சுவைக்க விரும்புவோருக்காக இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்றறிவோம் !

வடிவம்

புனைவு ! ஒவ்வொரு மனிதனும் பிறரை தன் சுய தர்க்கம் மற்றும் கற்பனையோடுதான் உருவகித்துக் கொள்கிறான். அப்படித்தான் நாம் கமல்ஹாசன் மீதும் ஒரு கற்பனை கலந்த தோற்றத்தைக் கொண்டுதான் புரிந்து கொள்கிறோம். இதே கூற்று புத்தர், காந்தி, கோட்சே, குட்டை அப்பு, டாம் ஹேன்க்ஸ், கிம் கி டுக் என எல்லோர் மீதான புரிதலுக்கும் அடிப்படை ! நம் கற்பனைகள் தர்க்கத்தோடு சேர்கையில் புரிதல் சற்றே மேம்பட்டதாக இருக்கும்.

கமல்ஹாசன் – பார்வையாளன் உறவு நிலை; கமல்ஹாசன் – மனோரஞ்சன் உறவு நிலை; மனோரஞ்சன் – உத்தமன் உறவு நிலை; உத்தமன் – இரணியன் உறவு நிலை; இரணியன் – மனோரஞ்சன் உணர்வு நிலை; என்று பல கற்பனை உண்மை கலந்த , அலையடிக்கும் மனநிலைகொண்ட உறவுகள் இந்த படத்தின் திரைக்கதையைப் பல்லடுக்கு கொண்டதாக இயல்பாகவே மாற்றியமைக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் ஊடுருவும் ஒன்றை ஒற்றைச் சொல்லில் சொல்லவேண்டுமென்றால் `மரணம்` என சொல்லலாம்.

Uthama-villan-3

மரணம், சாகாவரம் இதில் சாகவரம்தான் பெருஞ்சோகமென்றும், மரணத்தில் கூட பிறரைச் சிரிக்கவைப்பதே அல்லது கலைஞனாய் வாழ்வதே சாகாதிருக்க அல்லது ஆயுளை நீட்டிக்க வழியென்றும் ஒரு மனநிலையைத் தெரிவித்திருப்பதே கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும். இதுதான் வடிவம். இதன் வடிவத்தை ஒன்றோடொன்று முட்டாமல் மோதாமல் திரைக்கதையாகத் தந்திட்டது பெரும் சிந்தனையால் மட்டுமே கைகூடும் ஒன்று !

திரைக்கதை.

அப்படி என்ன திரைக்கதையில் இருக்கிறது. சரி ! முதல் காட்சியை ஆராய்வோம். ரசிகர்களின் கூட்டத்தின் நடுவே மனோரஞ்சன் கைகளை ஆட்டியபடி செல்கிறார். அவரது `வீர விளையாட்டு` எனும் படத்தின் பாடல் திரையில் ஓடுகிறது. அது முடிந்ததும் மேடையில் அவர் தோன்றுகிறார். அவர் பேசும் முதல் வசனம் `அப்பா ! சவுண்டு சர்வீஸ், கொஞ்சம் வால்யூம கொறங்க, தலைய வலிக்குது`! தன் மூளை கேன்சருக்கு அறிகுறியாக (Prodrome) இருக்கும் தலைவலி அது. ஒரு நல்ல திரைக்கதையில் கதை எவ்வளவு வேகத்தில் தொடங்கிவிடுகிறது இது போல.

அனைவரும் பாராட்டிய சில காட்சிகளில் முதன்மையானது தன் மகனிடம் தன் நோய் பற்றி சொல்லி அவனைத் தேற்றும் காட்சிதான். அந்த உரையாடலில் தன் மகன் திரைக்கதை எழுதப்போவதாகச் சொன்னதும், `என்ன, திடீர்னு` என்று மனோரஞ்சன் கேட்பார். உடனே` இல்ல ரொம்ப நாளா இருக்கு. ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் எழுதி எல்லாருக்கும் எங்க அப்பா யாருன்னு காட்டணும்` என்று சொல்வான் அவர் மகன். இதை அந்த முதல் தியேட்டர் காட்சியில் கவனித்தால் புரியும். வரலக்‌ஷ்மி (ஊர்வசி) `பாரு! அவருக்கு எவ்ளோ அப்லாஸ் நு` என்றதும், மனோகரன் `அது சத்தம்` என்று சலிப்புடன் சொல்வது புரியும். `வீர விளையாட்டு` என்ற மசாலாவில் நடிக்கும் தன் அப்பாவை யாரென்று காட்டவேண்டும் என்ற ஆழ்மன குமுறலாக அந்த சலிப்பு இருந்திருக்கலாம் !

இறுதிக் காட்சிக்கு வருவோம். தான் இவர் என்று டயலாக் சொல்லாமல் இது என்று சொன்னது குறித்து மனோரஞ்சனுக்கு சற்று குழப்பம். அதைத் தொடர்ந்து அவர் தடுமாறி நிலை குழைந்து விழ ! அனைவரும அவரைக் காக்க அழைத்து செல்கின்றனர். அதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் காட்சி. இதில் அறுவை சிகிச்சை நடைபெறும் காட்சிக்கும் அவர் நிலைகுலைந்து செட்டில் விழும் காட்சிக்கும் இடையே அவர் அந்த கிளைமேக்ஸ் `இரணிய சரிதம்` நடித்து தந்திருக்கிறார். எனவேதான் ஹாஸ்பிடல் ஹாலில் அந்த கிளைமேக்ஸ் படமிடப்படுகிறது.

Untitled-2 copy

இந்த இடத்தில் எடிட்டிங் தன் உச்சத்தை அடைந்து திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. மீண்டும் அவர் தடுமாறி விழும் காட்சிக்குச் செல்வோம். அவர் ஒரு நிழல் தெய்யத்தைக் கண்டு தவிப்பதாக ஒரு காட்சி வரும். அதை அவர் மரணமாக நினைக்கிறார். அந்த மரணத்திலிருந்து தப்ப நினைக்கிறார். அதைப் போலவே தப்புகிறார். (திரையில் வராத காட்சிகள்). மீண்டும் வந்து முழுமையாக நடித்துத் தந்துவிடுகிறார். இப்போது அவர் வாய் வீங்கி கட்டிலில் கிடந்து மயக்கம் தரப்படும் காட்சி நர்ஸ் மெல்ல அவருக்கு சில அறிவுரைகள் சொல்கிறாள். அதற்கு பதிலாக ` Revive பண்ண மறந்துறாதீங்க` என்று நக்கலாக பதிலளிக்கிறார். ஏனென்றால் மரணத்தை ஏற்க அவர் தயார். அவர் முழுமையாக படத்தை முடித்துவிட்டார், என்பதே.

நான் குறிப்பிட்ட காட்சிகளை, அதிகம் கவனிக்கப்படாத காட்சிகளை மட்டுமே விவரித்துள்ளேன். அனைத்தையும் விளக்கி உங்கள் புரிதலை மட்டுபடுத்த விரும்பவில்லை. சரி ! அந்த 8 ம் நூற்றாண்டு கதை எதற்கு. அதில் என்னதான் உள்ளது? நிச்சயம் அது ஒரு சிறப்பான பகுதிதான். அதை நோக்கி அடுத்த பாகத்தில் பயணிப்போம்.

அது தொடரும்.

Leave a comment