அலைகள் படுமென அறியும் மணல்வீடுகள்.


எழுத்துப் பிழைகளுடன் இருக்கும் கவிதைகள் தான் எத்தனை உன்னதமானவை, குழந்தைகளின் கிறுக்கல்களைப் போல. எழுத்துப் பிழைகளுடன் இருக்கும் கதைகள்தான் எத்தனை கவித்துவமானவை. போகன் சங்கரின் கதைகளை வாசிக்கையில் கிடைக்கும் அனுபவமென இதைச் சொல்ல முடியும். கதைகள் என்பவை, ஒரு சட்டகத்திற்குள் அடைத்து, சூத்திரங்களின் வழியே சொல்ல முடியும் என்று வரும் போது அவை சவப்பெட்டி போல நம்மை சூழ்ந்தடுக்கி, நம்மைக் கைகள் கால்களைக் கூட அசைக்காமல் சவமென நம்பவைத்து விடுகின்றன.

இலக்கியத்தின் பணி, குறைந்தபட்சமேனும் மீட்பின் பாதைகளைத் தேடி அல்லலுறுவதாகவேணும் இருக்கவேண்டும். துயரும், நிலையிலா குறுங்காட்டுப் புதிர்களும் தொடர்ந்து நையப்புடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு மாயை, கற்பனைச் சத்தியத்தை, நிஜத்தின் நிழலை படம்பிடித்தருகே காணத் தருமாயின் அது இலக்கியத்தின் வெற்றியாக கருதப்படலாம்.

ஜெயமோகன் அவர்கள் சொல்வதைப் போல இலக்கியம் தொன்மத்துடன் தொடர்பு கொண்டு ஒரு படியேனும் முன்னகர்ந்திருக்க வேண்டும். அல்லது இலக்கியம் ஒரு உலகளாவிய உணர்வினை மனிதன் யோசித்துத் தன்னைத் தானே உரித்துப் பார்த்து கண்டடைவுகள் நிகழ்த்திட வேண்டும். இவை இரண்டும் தொடர்ந்து போகன் சங்கரின் கதைகளில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

பல கதைகளுக்குள்ளும், மானுட வலியின் உச்சங்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பினும், அதனருகே மெல்ல ஒரு ஆறுதல் கண்ணீர் விட்டுக் கொண்டே, பச்சாதாபத்துடன் அந்த மாக்களை பாதுகாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது இதயத்துடிப்பென. ஒவ்வொரு கதைகளிலும் மதம் வருகிறது. மத போதகர்கள் வருகிறார்கள்; மீட்பர்கள் நுழைகிறார்கள். அவர்களும், தன் போர்வையை விலக்கி, தானும் தன் பங்கிற்கு மானுட வாழ்வினை ஒரு குரங்குச் சேட்டையாக மாற்றிப் பார்ப்போமே என்று களமிறங்கி ஒரு சட்டகத்தில் கீழ்மையே நித்தியம் எனக் காட்டி விட்டுவிடுகிறார்கள்.

போகனின் கவிதைகள், நாம் அடிக்க வருவதை உள்ளுணர்ந்த பூரான், நாம் எதிர்பார்க்காத பொந்தலுக்குள் நுழைவதைப் போல ஒவ்வொரு முறையும் முடிந்து போகிறது. அவரது கதைகளோ, தத்தித் தத்தி நடந்து பழகி மெல்ல நிமிர்ந்து நிற்கும் குழந்தையின் கணமான, அடுத்த காலடி புதைமணலில் என குழைகிறது. நீளவேண்டிய நேரத்தில் (சரியாகவே) நின்று விடுகிறது. நெருங்கியும், விலகியும் ஒவ்வொரு முறையும் நம் கதையையே தவறாமல் சொல்லிச் செல்வதன் மூலம் ஒரு தொடர் விளையாட்டின் நீண்ட சங்கிலியில் ஒரு பகுதியாக தகுதி கொண்டு நிற்கிறது.

நிர்வாணமும், மனப்பிறழ்வுகளும் இக்கதைகளில் வரும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களைச் சுட்டும் உருவகமாகவே நிலைக்கிறது. ஹார்மோன்கள் அறிவியல் மட்டுமாக இருந்துவிடக் கூடாது, என்கிற இலக்கியத்தின் கனவைச் சற்றே வலுப்படுத்தும் முனைப்புடன் இயங்குகிறது போகனின் கதைகள். மனதிற்கும், விரல்களுக்கும் தொடர்பிருப்பதாலேயே, கதைகளும், கதைகளைப் பற்றிய மதீப்பீட்டுரைகளும் சாத்தியமாகிறது. ஆனால், கதைகள் தெய்வங்கள், மதிப்பீட்டுரைகள் பிரார்த்தனைகள்.

முற்றிலும் வாசித்த கதைகள் முடிந்து விடும் ஆபத்து உள்ளதால், தன் பல கதைகளை ஒரே கதையின் ஆயிரம் வடிவங்களாக எழுதிடும் போகனுக்கு புரிந்திருக்கிறது கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்.

http://ezhuththuppizhai.blogspot.in/

Advertisements

ஆகிருதிகளின் குரற்தொகை


ஒவ்வொரு தேர்ந்த இலக்கிய வாசகனுக்கும், தல்ஸ்தோயா? தஸ்தயேவ்ஸ்கியா? என்ற கேள்வி எப்போதும் உள்ளாடிக் கொண்டிருக்கும். ஆம்! இந்த கேள்வியில், ஒரு துல்லியமான பதிலை எட்டிவிட்டதாக முடிவு கொண்டிருக்கும் எவரையும், அவரது இலக்கிய படிநிலையின் சறுக்கலில் உள்ளதாகவே கருத இயலும். இதை, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலின் நடுவே வாசிக்க நேர்ந்தது. எத்தனை மகத்துவமான, எளிமையான உண்மை. ஆனால், அந்த மன உரையாடலின் முடிவிலேயே இப்போதைக்கு தல்ஸ்தோய்தான், என்ற ஒரு முடிவையும் அக்கதாபாத்திரம் எட்டும்.

இந்த நாவலில் தல்ஸ்தோயின் பெயரே அதிகம் சுட்டப்பட்டும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் சித்திரங்களே அதிகம் இடம்சுட்டப்பட்டும் வருகிறது. ஆயினும், எனக்கு, கிடைத்த இந்நாவலின் தரிசனத்தின் அடிப்படையில், இது தஸ்தயேவ்ஸ்கியின் மொழியில், அவரது அக இருள்பற்றிய கேள்விகளை எழுப்பும் நடையில் அமைந்ததாகவே இருக்கிறது.

நாவலில், முக்கிய பாத்திரங்கள் யாவும் அடையும் சஞ்சலங்கள் வழியாகவும், எளிய பெண் தன் குறை அறிவினாலேயே உணர்வுகளின் உச்சத்தை அடைந்து தேவதைகளாக ஆங்காங்கே மிளிரும் தருனங்கள் வழியாகவும், பதற்றமுற்று அசைந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் வழியே உருவாக்கப்படும் பித்து நிலையும், அதன் நீட்சியாக பிரவாகமெடுக்கும் சத்தியத்தின் ஒளியையும் உணரும் வழியாகவும், அக நெருக்கடியின் வழியே, கனவுகளின் வழியே, தனிமையின் வழியே, தன்னை வருத்திக் கொள்ளும் பண்பின் வழியே மீட்பினை ஒவ்வொரு மாந்தரும் தேடி நகர்வதாக இருப்பதன் வழியாகவும், இது தஸ்தயேவ்ஸ்கியின் மனசாட்சியை அணிந்து கொண்டு எழுதப்பட்டதாகவே உணர முடிந்தது.

இது மேலும் தனித்தன்மையுடன் பரிணமித்திருப்பதன் அடிநாதமாக, ஒவ்வொரு மனதின் மெளனங்களும், காயங்களும், விம்மல்களும் காலத்தை ஓட்டை போட்டு தன்னைப் போலிருக்கும் மனங்களுடன் கலந்து ஒற்றை பேரிருளாகிறது. அவ்விருளின் வெம்மையும், விடிந்த பின் வரும் வெயிலின் தண்மையும் அகத்தின் சஞ்சலங்களாக தீட்டப்பட்டுள்ளது.

அருணாச்சலம் என்ற கதாபாத்திரம் முதல் வர்ணணையிலேயே, தான் வாசலைத் தாண்டி இடது காலை வைத்துவிட்டதில் ஏற்படும் துணுக்குறல்  (அல்லது சஞ்சலம்) காரணமாக, எழும் கேள்விகளை தானே எதிர்கொள்வதில், தனிமனித போராட்டத்தில், அதனால் விளையும் ஊசலாட்டத்தில் துவங்குவதுதான் எத்துனை பொருத்தம் செங்கொடித் தோழர்களின் மனவியலுக்கு!

பைத்தியங்களின் வழியே இறைவனைக் காணும் விழிகள் நமக்கு மெல்ல உருக்கொண்டு வளர்கிறது. ஒரு பைத்தியத்தைச் சுட்டும் போதும், பிச்சைக்காரனைச் சுட்டும் போதும், ஒரு குழந்தையைப் பார்க்க முடிகிறது. குழந்தையின் மட்டற்ற, களங்கமற்ற விளையாட்டை மட்டுமின்றி, புறக்கணிப்பினால் விளைந்த பரிதவிப்பும், பயமும் கொண்டு செய்யும் விம்மல்களையும் பார்க்க முடிகிறது.

நாவலின் நோக்கமாக மையக்கருவிலிருந்து விலகி விளிம்புகளை நோக்கி விரிதல் என்ற அடிப்படைத் தமிழில் உச்சத்தில் உருவாகியிருக்கும் நாவல் இது. ஆயிரம் விளிம்புகள், ஆயிரம் கேள்விகளிலிருந்து உருவாக்கப் பட்டிருக்கின்றன. கம்யூனிசம் ஒரு மதம் என்று நிறுவ முற்படும் ஒரு அறிவுஜீவியிடம், தன் தருக்கத்தின் ஊன்றுகோல்களை இழந்த கம்யூனிச உணர்வாளன் கொள்ளும் மெளனமும், அதிலிருந்து வரும் ஏக்கமும், மீட்பின் வாசலைப் பொருத்தி பார்த்து அக்கற்பனை தரும் வெறுமையும் நம்மைப் பீறிடலிலிருந்து கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவை ஆக்கிவிடுகின்றன.

தற்போது, இரண்டாண்டுகளாக உலக அளவில் பெரிதும் முக்கியமான நூலாகப் பரிந்துரைக்கப்பட்டு வரும், ‘சேப்பியன்ஸ்’  நூலில் இந்த ‘மதம்’ பற்றிய வரையறைகள் உண்டு. அதில், இவ்வாறு கம்யூனிசத்தை மதமாக உருவகித்துச் சொல்லப்பட்டிருக்கும். இருப்பினும், இப்புனைவில், இருக்கும் நீட்சியை அது தொடவில்லை, அல்லது, பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் தொடவே முயற்சி செய்திருக்கிறது. ஆனால், இம்மனநிலை, இடது வலது கால்களில் தொடங்கி சித்தாந்தங்கள் வரை கேள்விகளால் ஊசலாடிக் கொண்டிருந்த சத்திய மனங்களுக்கு எப்போதும் இருந்திருக்கிறது, என்பதை தரிசனத்தின் ஒரு புள்ளியாகக் கொள்ள இயலும்.

வியப்பாக, ‘ஒரு மனிதனின் மூளையை வடிவமைப்பதன் மூலம் ஒரு சமூகத்தையே வடிவமைக்கும் நிலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது’  என்று ஒரு கதாபாத்திரம் சொல்கையில், இதுவும் ‘ஹோமோ டியஸ்’ நூலில் முக்கிய பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அறிவு நிழல் என தொடர்ந்து வரும் மனசாட்சியிலிருந்து பல காலமாக மெல்ல அடைந்ததுதான் அத்தனைக் கோடி நூல்களும்.

இந்நாவலைப் பற்றி, பலரும் எழுதி இருக்கிறார்கள். ஜெயமோகன் அவர்கள் தளத்திலேயே இவை தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு நான் என் அகத்தின் வெளிப்பாடுகளைத் தெரிவிக்கக் காரணம். இது தனித்துவமானதுதான் எனப்பட்டதே. இந்நாவல், வெகுவாகவும் கவித்தனமானது – மொழியினடிப்படையில் அன்றி சித்தாந்த அடிப்படையில் – எளிமையாக அகவயமானது என்று குறிப்பிடலாம். ஒவ்வொரு வரியிலும் இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் பகுப்பாய்வும் செய்யதக்க நூலாகவே இது உள்ளது. ஆயினும், அதை நான் செய்ய முடியாது. இது உயிர்சதையாக என்னை காட்டுகிறது. வெறும் காடாவர் ஆய்வு பணியாக இதை மேற்கொள்ள முடியாது.

உயிர்தெழுதல் என்னும் அத்தியாயத்தில் வரும் மீட்பர் புண்களுடன் உள்ளார். அது மக்களின் புண்களின் பிரதிபலிப்பு.  தங்கள் புண்களை ஒன்றோடொன்று காட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீட்பரின் புண்களைப் பார்த்ததும் துயருற்று, அப்புண்களைத் தங்களுக்குத் தந்துவிடுமாறு வேண்டுகின்றன. அங்கு மீட்பர் கொள்ளும் உக்கிரநிலையே சிவப்பின் நிறம்! உண்மைதான் ‘வன்முறை தூங்கும் பூதம்’ அதை எழுப்பிவிடும் தூண்டற்காரணிகள் மட்டும் ஒவ்வொரு நிழலுக்கும், ஒவ்வொரு ஜடத்திற்கும் வேறுபடுகின்றன.

 

 

 

சன்னதம் உணர்த்தும் உன்னதம்.


 

ஜெயமோகன் அவர்களின் குறுநாவல்களைத் தொகுத்து, கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும், ‘ஜெயமோகன் குறுநாவல்கள்’ நூலினை வாசித்தேன். ஒருவரது செயல்பாடாக அன்றி, ஒரு இயக்கச் செயல்பாடாக வெளிவந்திருக்கும் இக்கதைகளின் வழி பயணிக்கையில், தோன்றும் மனவெளிகள் – நம்மால் உணரும்படியான அருகிலிருக்கும் சூழலைத்தான் சுட்டுகின்றன எனினும் – உருவாக்கும் தெள்ளத் தெளிந்த மீள் கட்டமைப்பு, அதை அண்மையில் தரிசிக்கும் இன்பம், தீக்குள் விரல் வைத்திடல் ஆகிறது.

கடல்கள் உலகில் பல. ஆனால், அவை அனைத்தையும், இணைத்துப் பார்த்தால் தெரியும், உலகின் கடல் ஒன்றே ஒன்றுதான். தன் உப்புத்தன்மையிலும், தோற்றத்திலும், அடர்த்தியிலும், நிலவமைப்பிலும் மட்டுமே அவை வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன!

இத்தொகுப்பின் கதைகள் மொத்தம் பதினொன்று. அவை, கிளிக்காலம், பூமியின் முத்திரைகள், மடம், பரிணாமம், லங்கா தகணம், அம்மன் மரம், டார்த்தீனியம், மண், நிழலாட்டம், பத்மவியூகம் மற்றும் இறுதிவிசம்!

ஆனால், இத்தொகுப்பினை ஒரே கதையின் பல்வேறு அத்தியாயங்களாகப் பார்த்திட வைக்கும் சரடுகள் எங்கும், நிரம்பியுள்ளன. ஒவ்வொரு கதையும், அலறி, சத்தமிட்டு, ஓலமிட்டு, இருளை உமிழந்து, ஆங்காங்கே ஒளியின் கீற்றைச் சுட்டும் விதத்தில் ஒரே கதையாகப் படுகின்றன.

அம்மன் மரம் கதையில், ‘ என் உடம்பின் ஒவ்வொரு அணுவையும் கடும் களைப்பு தழுவியது’ என்றொரு வரியினை ஒரு பாத்திரம் சொல்லும். அதையே ஒவ்வொரு கதையின் முடிவிலும், நான் அடைந்தேன் என்று சொல்ல முடியும். அப்படி அடையும் களைப்பே மேலும் வெறி கொண்டு அடுத்த கதையினை நோக்கி என்னை ஈர்த்து இழுத்தது. அவ்விதமாகவே ஒவ்வொரு கதைகளையும் வாசித்து முடிக்கையில் அக்களைப்பின் செறிவு தவிர்க்கவே முடியாத ஒரு அடிமைத்தனம் போல உலுக்கியது என்னை.

கிளிக்காலத்தில் வரும் ஒரு காட்சி அதன் கதையெங்கும் வியாபித்திருக்கிறது. ‘உஷா அக்கா உங்களிடம் ஒரு விசயம் சொல்லச் சொன்னாள்’ ‘ ஒரு தேவடியாளும் என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை போடா’ என்று சொல்லும் ஒருவனது மனநிலை சட்டென்று, ஏங்கி மெல்ல ‘ சரி, உன் உஷா அக்கா என்ன சொன்னாள்’ என்று அன்புக்களையும் எளிய மாக்களாகிப் போவதை பேசுகிறது, கதை. இந்த உச்சத்திற்கும், வீழ்ச்சிக்குமான பேரலைகளை ஒவ்வொரு வரியும் பேசிச் செல்கிறது.

டார்த்தீனியம் , அம்மன் மரம் மற்றும் நிழலாட்டம் இம்மூன்று கதைகளும் அடிப்படையில் அமானுஷ்யம் பற்றிய கதைகளெனத் தோன்றியும், அதைத் தாண்டிய மனவடுக்குகளில் நெளியும் புழுக்களை தவிர்க்கவே முடியாததைப் போல, அம்மனக்குறை கொண்ட நம் அன்னையின், தந்தையின், அக்காளின் வலியை நம்மால் தவிர்க்கவே முடியாமல் போவதை பேசிச் செல்கிறது. இம்மூன்று கதைகளுமே தன்மை நிலையிலிருந்து சொல்லப்படுகிறது. அது எனக்கு வெகுவார்ந்த அருகாமையை ஏற்படுத்திச் செல்வதால், அவ்வருகாமையின் தவிர்க்க இயலாமை தரும் பாதிப்பே இக்கதைகளின் நோக்கமாக இருந்திருக்க முடியும்.

சிவப்பொளியின் உக்கிரத்தை லங்கா தகனத்தின் ஆரம்ப பக்கங்களில் சொன்னதைப் போன்று எங்கும் நான் வாசித்ததில்லை. அதன், சிவப்பு தொடர்ந்து வந்து அம்மன் மரத்தில் குருதியாய் வழிகையில், இந்த சிகப்பு எத்தனை தூரதூரங்கள் தான் விடாது தொடர்ந்து வந்து, வஞ்சினம் செய்யும் என பதறும் அனுபவமே நிறைந்தெழுகிறது.

ஒவ்வொரு இலக்கியச் சூழலிலும், அதை விழியூடகத்திற்கு உயர்த்தும், வாய்ப்புகள் இருப்பின் அம்மொழியின் அந்நாட்டின் ஒளிமிகுந்த கலை உச்சத்தைத் தொடும்! மண் என்னும் குறுநாவலில் வரும், சில காட்சிகளை நல்திறம் வாய்ந்த ஒளியூடக, விழியுடக கலைஞர்கள் உணர்ந்தேற்று காட்சிப்படுத்த முடியும் எனில், உலகமே தமிழ் பண்பாட்டின் எழுத்தின் கூர்மையையும், அதன் தவிர்க்கமுடியாத வலியையும் தன்னகத்தே உணர்ந்து திரும்பும். அந்த காட்சிகளுக்கு இணையான காட்சிகளை ஜெயமோகன் எழுதிய ‘கொற்றவை’ நாவலின் முதல் இருபது பக்கங்களில் உணர்ந்ததாய் மட்டுமே நினைவு!

ஒவ்வொரு கதைகளாய் விவரித்தும், விளக்கியும் எழுதிட மறுத்து, என்னை நானே படித்தவுடன் தோன்றும் உணர்வுகளை மட்டும் பதித்து வைக்க எண்ணி இவ்வாறு எழுதி இருப்பதாய் தோன்றுகிறது. இன்னும் நூறு முறை வாசித்தும் தீராக் கடல் ஜெயமோகன் அவர்கள் படைக்கும் வண்ணக்கடல்!

 

வட்ட வடிவ மனிதர்கள்


மனிதம் இலக்கியத்தைக் கண்டடைவதற்கு அவனது நரம்பிழைகளின் மேம்பட்ட மாதிரி வெகுவாய் பயன்பட்டது. அதன், எண்ணிலடங்கா இணைப்புகளும், எளிதில் வசப்படும் வடிவமில்லா நெகிழ்வுகளும், மூளையின் மேடு பள்ளங்களில் தரவுகளைச் சேமித்து வைக்க முடிவதற்கான ஏற்பாடுகளும் – அத்தோடு – கற்பனைகளின் வழியே உலகை வாழ்ந்து அளந்துவிட முடியும் என்ற ஏக்கத்தையும் அதற்கான தீர்வையும் தந்திருந்தது. வடிவம் அதன் செயல்திறனை நிர்ணயிக்கும் அடிப்படைக் கூறாக மிஞ்சுகிறது எக்காலமும். ஆனால், பேராச்சர்யமாக, செயலைச் செய்ய நினைக்கும் ஆற்றலின் எத்தனமே வடிவமாக எஞ்சி விடுகிறது.

இலக்கியம் தனது வடிவத்தை விசும்பிலிருந்தும், காலத்திலிருந்தும் உருவான தொகையின் நடுவே மனித மனம் பிடுங்கிக் கொள்ளும் முயற்சியிலிருந்து மெல்ல பெற்றுக் கொள்கிறது. எனவே, மெல்ல காலம் நடக்க நடக்க, இலக்கியமும் தான் உருவாக்கப்படும் விசும்பிற்கேற்ப, வடிவம் கொள்கிறது. அடிப்படையில் சதுரம் ஒன்றுதான், ஆனால் அதை நீட்டி, மடக்கி, இழுத்து, கனப்பரிமாணம் தந்து பார்க்கையில் சதுரத்தின் உள்ளே இருக்கும் வடிவங்கள் மெல்ல எட்டிப் பார்த்து சிமிட்டுகின்றன. இலக்கியமும், தன் வீச்சினை மனிதனுள் செலுத்தி, அவனை அலைக்கழிக்க எத்தனிக்க எத்தனை வடிவங்களை தன்பால் அகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலக்கிய டப்பா தன்னுள் கொண்டிருக்கும், கூழாங்கற்களை ஆட்டி ஆட்டி எழுப்பும் சத்தம் ஒரே மாதிரியான ஒலியை எழுப்புகிறது. அதன் வெளிப்பாடானது, கேட்பவரின் உணர்வெழுப்பிகள், அதை இசையாக்கும் நபரின் மனக்கலக்கம், அதை ஏற்றிச் செல்லும் ஊடகம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே அது சற்றே நிறப்பிரிகை அடைந்து வண்ணக் கனவுகளை முன்னிறுத்துகின்றன. ஜோசப் கேம்பெல் உருவாக்கிய கோட்பாட்டின் ஆதாரத்தன்மை, அந்த கூழாங்கற்களை, கதாபாத்திரங்களாக இனம்காணுவதில் நமக்கு எந்த கடினமுமில்லை (பாருங்களேன்!) என்பதையே தன் உளவியல் வெற்றியாக பதிவிடுகிறது. இந்த சலனத்தினால் ஏற்படும் உலகமே எந்த மூலையிலும், நிகழும் ஒரு கதையினை நம் கதையாக்கி விடுகிறது.

முஹம்மத் உமர் மீமோன் தொகுத்திருக்கும் இருபத்தைந்து மகத்தான உருது சிறுகதைகளை வாசித்த நெகிழ்வில், மனிதத்தின் ஒத்த தன்மையை எங்கும் நிறைத்திருக்கும் ஐம்பெரும் பூதங்களின் மீதான அழகியலை ரசித்த பரவசத்தில் இதை எழுதுகிறேன். தமிழ் மொழியின் சிறுகதைப் பரப்பில், நிகழ்ந்திருக்கும் உச்சத்திற்கு இணையாக நிகழ்ந்திருக்கும் உச்சம் இது.  தமிழின், படைப்புச் செயல்பாடுகள் – அது எக்காலத்தில் நிகழ்ந்திடினும் – அதன் ஆதாரத்தை சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணக்கிடைப்பது போலவே, உருது மொழி எவ்வித நவீனத்துவ, பின் – நவீனத்துவ இலக்கியச் செயல்பாடுகளில் திளைக்கும் போதும் மெல்ல அது தன் வேர்களை தன் காப்பியங்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறது.

அதனாலேயே, வெகுவான கதைகள் – சில முக்கிய விதிவிலக்குகளும் உண்டு – ஒரு இயற்கையை மீறிய, தெய்வீகத்தன்மையை நோக்கிய பார்வையுடனேயே நிகழ்கிறது. அது நேரடியாக, ஒரு இயற்கை பொருளின் அத்தோற்றத்துடனேயே போதுமென்ற மனம்கொள்வதில்லை. அதனால், காலத்தை தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, காலத்தைச் சுழற்றி சுழற்றி, அடுக்கடுக்காக்கி, தன் கதாபாத்திரங்கள் மூலம், ஒரு மாயத்தன்மையுடனேயே பேசுகிறது. ஆனால், இது நேரடியாக கதைகளில் சொல்லப்படுவதில்லை, கூர்மையான ஆயுதத்தால், தடவி தடவி கொடுக்கையில் மட்டுமே நெகிழ்ந்து தன்னை முழுதும் காட்டிக் கொள்கிறது. இதனை, உருது சிறுகதைகளின் கூட்டியல்பாக சுட்டலாம்.

விதிவிலக்காக, கணிசமான கதைகள், ரத்தம் தோய்ந்த பிரிவினையைப் பற்றியதாக இருக்கின்றன. அவை அனைத்தும், இந்து முஸ்லீம் என்ற இருமை நிலையை அக்கதைகள் இணைத்தும் பிரித்தும் பார்த்து பார்த்து சுபமான முடிவேதும் எய்த இயலாத திரிசங்கு நிலையை எய்தி ஏக்கப் பெருமூச்சுடன் முடிந்துவிடுகின்றன. மண்டோவின் கதைகள் மட்டும் சற்று ஓரடி முன்னகர்ந்து அந்த இருளின் மீது காறி உமிழ்கிறது.

மேலும், மகளிரின் அசாத்திய வாழ்வியலை, அவர்களது மடமும் நிலைத்தன்மையும் இணைந்து ருதுவாகும் உன்னதத்தை, குழந்தைமை என்றும் நிலைக்கும் ஒரே இடமென நினைவுகள் எஞ்சும் சுகத்தை, காலத்தின் ஊர்தல் தரும் அசெளகரியத்தை என வாழ்வியலின் துமிகளைச் சேகரித்து இருத்தி ஒரு மழையென்றே பொழிகின்றது அக்கதைகள்!

மனிதர்கள் வட்ட வடிவமானவர்கள் என்றொரு கதையில் வருகிறது. அது பூமி வட்டமானது, ஒளி வட்டமானது என்பதையெல்லாம் கடந்து ஒரு கண நேரத்தில் ஒரு தந்தைக்குப் புரிந்துவிடுகிறது. இந்த உண்மையை அவர் உணர்ந்ததும் வரும் வெறுமை, ஆழமானதாகவும், நம் யாக்கையின் உள்ளேயே நம்மை சிறைவைத்து, சிரிக்கும் கொடுமையான சலிப்பினை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. மனிதனைப் போல இலக்கியமும் வட்டமானது, ஆனால், அதை நீட்டி மடக்கி, ஆரத்தின் நீளத்தை மாற்றி, ஒன்றோடொன்றென பல்வட்டங்களை கூட்டி, கோலமிட்டு தரும் உருது இலக்கியம் சலிப்பான மனிதத்தை மீட்க துள்ளும் ஒரு தூண்டில்!

 

கோதர்டின் குறிப்பேடு


கோதார்ட் தன் தற்போதைய ஆய்வு பணியின் களசேகரங்கள், கவனநிலைகள், கவனமின்மைகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த தன் குறிப்பேட்டைத் தினமும் போலவே இன்றும் திறந்து வைத்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கையில், அவருள்ளம் முதலை வயிற்றில் இறங்கும் மரித்த மானுடலென மெல்ல நழுவிக்கொண்டிருந்தது. மனநிலையிலிருந்து நழுவுதலே பல புதிய கருத்துக்களையும், கருவிகளையும் உலகிற்குக் கொடையெனத் தந்துள்ளது; மாறாக மனநிலைகொள்ளல் அல்ல. மனநிலைகொள்ளல், மனக்குவியம், மனவொருமுகம் ஆகியவை மாணவர்களுக்கானது; மனநழுவுதல் கவிஞர்களுக்கும் அறிவியலறிஞர்களுக்குமானது. மனநழுவுதலிருந்தே மாபெரும் தத்துவங்களும், மகோன்னத காவிய கணங்களும், அறிவியல் கண்டடைதல்களும் நிகழ்வெடுக்கின்றன.

அவரது கண்டடைதல்களின் உட்சுவர்களில் மோதி ஒலித்து ஆர்வத்தைத் தூண்டிய, ராம்சேயின் வழக்கினை ஆய்வுக்குட்படுத்திய தன் குறிப்புகளை நோக்கியவாறு, தன் உள்முகப் பயணத்தின் தொடர்ச்சியில் நிகழ்ந்து, கரைந்து கொண்டிருந்தார். அவன் பள்ளியில் பாடங்களில் வெகு மெதுவானவனாக இருந்து வந்தான் குறிப்பாக கணிதத்தில். ஒவ்வொரு முறையும் அவனது கணிதவகுப்பில், அனைவருக்குமான ஒரு ஜோக்கராக அவனுரு நிலைபெற்றிருந்தது. தன்னை உயர்ந்த மாணவனாக கருதிக்கொள்ள எவரும் தன்னருகே ராம்சேயினை பொருத்திப் பார்த்துக் கொண்டால் போதும் என்ற கருத்து பொழுதொரு வண்ணமென வளர்ந்து, வகுப்பறையில், பள்ளியில் நிறைந்து விட்டிருந்தது.

அவ்விளைவு அவனைத் தனியனாக ஆக்கிய கணந்தோறும், தனிமை அவனத் தோல்வியுற்றவன் என்று அவனுக்கே சுட்டுவிரல் நீட்டி, தனிமையின் சுட்டுவிரல் மடங்கியதும் இரு கைகளென அவன் கழுத்தினை நெருக்கி, அவனை விழுங்கிடத் துடித்தது. அவனது ஐந்தாம் வயதில், அவனது பெற்றோருக்கேற்பட்ட மணமுறிவின் வலிகள் மெல்ல இதைச் சரியான தருணமெனப் பற்றி அவனை மேலும் அழுத்தியது. எதற்காகவோ, யார்யார் மீதெல்லாமோ கோபமும் ஆற்றாமையும் நுரைத்து அவனைத் தனக்குள்ளேயே மூழ்கடித்தது.

ஒரு வழியாக, ஆரம்ப காலத் தனிமையை அவன் உள்ளம் மெல்ல கடந்தது. தனிமை – ஓடினால் துரத்திவரும் என இருந்து, துரத்தினால் பயந்தோடும் – நிழலென படிமாறி பின், நிழலென்பதாலேயே அவனுடனேயே இருந்தது; திகழ்ந்தது; அணைத்தது; குழைந்தது. பின், தனிமை அவனை அவனது குற்ற எண்ணங்களிலிருந்து, விடுவிக்கும் பாவனையில் அவனை கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது. அவன், நிகருலகில், நிகரிலா மகிழ்வையும், தன்னிச்சைகளின் விடைகளையும் கண்டது அவனைத் தனிமையின் நண்பனாகவே மாற்றியது. இந்த நட்பின், நீள்காலம், புதிய பரிட்சார்த்தங்களைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தது. அந்த புறச்சூழல் எப்போதும் போலவே – சொல்லப்போனால், இன்னும் கூடுதலான காழ்ப்புடன் – அவனை சிரிப்பிற்கானவனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததிலிருந்து, அவனை இளக்காரத்திற்கும், மனநோயாளியென எடுத்துக் காட்டுவதற்குமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தது.

ராம்சேயின் பதினேழாம் வயதில், தன் தனிமையின் உத்தரவுப்படி, அவன் தன்னை வேகத்தின் ஆற்றலாய்க் கருதிக்கொண்டிருந்தான். வேகமாக எதையும் செய்திட வேண்டுமென அவனுள்ளம் அவனை படுத்திக் கொண்டிருந்தது. வேகம் என்பது, தனது ஆழத்தில் ஊறுகின்ற ஒரு நதியென அகம்கொண்டான். அவன் தன் அகம் செல்லும் வேகத்தில் ஒரு வாகனம் வேண்டிப் பெற்றான். அதில் பயணம் செய்கையில், அவன் இன்னொருவனாக உருவம் கொள்வதைக் கண்டு வியந்தான்; பரவசமடைந்தான்; தற்காலிகமாகவேணும், விசும்பினையும், காற்றினையும் வெற்றி கொள்வதாய் மனமகிழ்ந்தான்.

மனசாட்சியின் படி நடப்பதெனப்படுவது எப்போதும், நன்மையைப் பெற்றுத் தராது. அது துயரத்தை பல சமயங்களில் உருவாக்கிவிடும். அவனது, வேகம், பல நேரங்களில் ஆபத்தினை துவக்கப்புள்ளியாகக் கொண்டே தன்னை நீட்சித்து கொண்டிருந்தது. அவனது, வாழ்வின் நீளத்தை எல்லாம் அந்த இரு சக்கர எந்திரப்பறவை அவனை ஏற்றிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது. அதன் மேல் நாளுமொரு புதிய இலக்கினை கொண்டு கடந்து சென்று கொண்டிருந்ததால் அவ்வெற்றியின் இனிமையில் முழ்கி அந்த பேரிலக்கொன்றை அகம்கொண்டிருந்தான். ஃப்ரான்சின் காம்பி லேவல் சாலையினை கடும் வேகத்தில் தன் வாகனத்தில் கடந்திடவும், அதைக் கொண்டு தன்னகவெறியினைச் சற்றே தணித்திடவும் எண்ணம் கொண்டு அதுதரும் உத்வேகத்திலேயே சில நாட்களைக் கழித்தான்.

அச்சாலையின் தோற்றம் அதை சொர்கத்திற்கான வழியெனக் காட்டியது. அதன் மீது வேகத்தைப் பொழிவதே அதன் வனப்பினை முழுதும் அடைந்து வென்றெடுப்பதன் நிறைவைத்தரும். தன் பறவையைத் தட்டினான். அவனது அருந்திறன், அவனது அசைவுகள் இரண்டும் சேர்ந்து அவன் மோட்டாரினை அவன் அங்கமெனவும், அவன் எண்ணங்களை அதில் சேர்க்கும் நரம்பிழைகளென அவன் தோலடுக்கும் மாற்றிக் கொண்டிருந்தது. அவனது வேகமானி, மெல்ல சிகப்பைத் தொட்டு, அவனை மேலுமேலுமென உன்மத்தம் நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது.

அவன் பயணத்தில் உலகின் பால்கனியில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது. பனி மெல்லிய படலமாகி, வெண்மங்கையின் மேலாடையென நிரம்பியும், விலகியும் அவனுக்கு பெரும்கனவொன்றைச் சமைத்து தந்து கொண்டிருந்தது.

அவன் தன் வாழ்வின் கடிமான இலக்கொன்றை பூர்த்தி செய்திருந்தான். ஆம், அந்த உலகின், அழகும், ஆபத்தும் நிறைந்த சாலையை வெகு வேகத்தில் கடந்திருந்தான். மெல்ல தன் வேகத்தைக் குறைத்து காற்றோடு கைசேர்த்து பயணிக்கையில் அவன் கவசத்தின் உள்ளேயே கண்ணிரின் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன், தன் உள்ளச் சமவெளியை தொடும் முன்னரே, சமவெளியை அடைந்திருந்தான். அவனது, வேகமானியின் சிகப்பினைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொண்டே இருந்தான். அவன், தன் மனவெழுச்சியைத் தாங்க முடியாதவனாகி தன் வாகனத்தின் மேலேயே ஏறி நின்று தன் கைகளை விரித்தான் ஏதோ பிரபஞ்சத்தைக் கட்டி அள்ள நினைப்பவன் போல.

அவன் தேவனாகி இருந்தான். அத்தனை எள்ளல்களையும், எரிச்சல்களையும் கடந்தவனாகி இருந்தான். அவனெதிரே, மைய நதியில் இணையும் ஒரு கிளை நதியென, ஒரு சிறுசாலை வந்திணைந்தது. இவன் அதன் முகப்பை தொடும் நிச்சலனத்தில், சாலையின் மேலேயே ஊர்ந்து வந்திருந்த ஒரு பாரவண்டி அவனுடன் இதழ்சேர்த்தது. அதன் பின்னர், வலியைக் கடந்த வலியையும், ஆம்புலன்ஸ் ஒலியையும், சித்திரமென தோன்றி மறையும் செந்நிற பிண்ணனியில் வெண்ணிற இறகென அசையும் தேவைகளையும் உணர்ந்து கொண்டிருந்தான்.

அவனைச் சூழ்ந்து அவனுயிரைப் பறிக்கக் காத்துக் கொண்டிருந்த உயிரிலிகளிடமிருந்தென, அவனை பாதுகாக்கும் முனைப்புடன் செவிலிகளும் மருத்துவர்களும் பெரும் நகரத்தின் இயக்கமென செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வசைவுகள் அனைத்தையும், ஒரு துளி விடாமல் முழுமழையிலும் நனைய இச்சைகொண்ட மழலை போல, தன் சுவர்ண முலாமிட்ட பேனாவினுதவியால், தன் குறிப்பேட்டில் வரைந்தும், சுருக்கெழுத்துகளிட்டும், எழுதியும் கொண்டிருந்த கோதர்ட் நிரம்பியிருந்த மை குருதியாய் வெளிவந்து கொண்டிருப்பதை அறிந்து நிலைத்தார்.

அவரால், அடுத்தேதும் குறிப்பெடுக்க இயலாதபடி, அவரை ஏதோ ஒன்று தடுப்பதுபோலிருந்தது. அவரை நெடு நேரம், அவரே கவனிக்காத போது, முகத்தில் எவ்வித உணர்வுகளுமற்று உற்றுக் கொண்டிருந்த நீல நிற கண்களுடைய செவிலி திடீரென அவரது சவரம் செய்யாத தாடையைக் கவ்வி, மயிர்க்கால்களை இழுத்து விழுங்கத் தொடங்கியதும், திடுக்கிட்டு விழித்தார்; உண்மையில், அது தன் தாடையில் கவ்விய நாகமெனக் கண்டதும், பயமெழுந்தாடி தன் உடலெங்கும் வெந்நீலமென மெல்ல சூழ்ந்து, அவரது மூளைக்குள் நிறமியென தொட்டதும், தேற்கொடுக்கென கொட்டியதும், மூச்செழுச்சி கொண்டு தன் நினைவின் தளத்திற்கு வந்து, தன் குறிப்பேட்டை வெறித்துப் பார்த்து விலக்கி வைத்தார்.

நீரில் தன் முகத்தை அறிமுகப்படுத்தி, தன் மீது படர்ந்திருந்த ஆய்வின் நீட்சியால் உணர்ந்த களைப்பின் ரேகைகளைக் களைய முற்பட்டார். ஆய்வென்பது, ஒரு தொடர் நிகழ்வு, அதில் ஆர்வம் மட்டுமே ஒரு தூண்டுதல் என்றிருக்க முடியாது. தவ நிலையால் மட்டுமே அது நிகழும்; மனிதனைப் பற்றிய ஆய்வுகள் அதனினும் கடியது; மனித மனங்களைப் பற்றிய ஆய்வுகள் கடவுளைப் பற்றிய ஆய்வுகளை விடவும் சிடுக்குகள் நிறைந்தது. முகம் மட்டும் குளிர்வித்த, நீரின் போதாமையை உணர்ந்து இசைத்தட்டினை உருளவிட்டார். அது, அலைகளென மாறி, அவ்வறையையும் அவரையும் அணைத்து ததும்பியது.

19989768_1526988530657892_6512027270239114418_n

ஓவியம் : கவினெழில்

கோதார்ட் அன்று முழுச்சவரம் செய்திருந்து தன் அகவையில் சற்று பின்னகர்ந்திருந்தது, ராம்சேயின் மனச்சுமைகளை அவர்முன்னர் இறக்கிவைக்கச் சற்றெளியதாய் இருந்தது என்பதைக் காட்டும்விதமாக அவனே அன்று அவருக்கு முன்னதாக தன் உரையாடலைத் தொடர்ந்திருந்தான். “அன்று, அனைவரும் என்னை உயிர்பிழைக்க வைத்துவிட வெகுவாய் முயன்றிருந்தனர்”, ராம்சே தொடர்ந்தான். “ஆனால், எனக்கோ இன்னும் சில நுண்காலத்தில், தன்னை நிச்சயம் இழந்துவிடுவேன் என்ற உறுதி மண்டைக்குள் வந்து சேர்ந்திருந்தது. அதை என் உள்ளுணர்வு முன்வைத்திருந்தது. உள்ளுணர்வுகள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்ற எண்ணம் என்னை ஒரு மெல்லிய கீறலென வெட்டிச் சென்றது; அதை தொடர்ந்து உடனேயே உள்ளுணர்வுகள் அனைத்துமே பொய் என்ற எண்ணம் மெல்ல எனக்கு வலுப்பெற்றது.”

இடைநுழைந்த கோதர்ட், “ ராம்சே! தங்களுக்கு ஏற்பட்ட  ‘உள்ளுணர்வுகள் பொய்’ என்ற எண்ணம் எதை உங்கள் மனதில் சுட்டியது என சற்றே குறிப்பாக உணர்தினால் மகிழ்வேன்’ என்றார்.
“ நிச்சயமாக, எனதருமை மனவியல் மருத்துவரே!” என்றவாறே தன் கைகளால் தன் உதட்டருகே துடைத்தவாறே, தன் எதிரே அமர்ந்திருந்த கோதார்டின் நாற்காலியைக் கவனித்துக் கொண்டே, தன் கைகளை ஒன்றோடொன்று பிணைத்து சிந்தித்தவாறே “ வெகு நேரம் நடக்கையில் நம் மனம் நிற்பதை விரும்பும்; வெகு நேரம் நிற்கையில் நம் மனம் நாற்காலியைத் தேடும் இயல்பாக; வெகு நேரம் அமர்ந்திருந்தால் படுக்கையில் சற்று முதுகைச் சாய்த்து, துயில் கொள்ளலாம் என்று தோன்றும்; அன்று, நான் இருந்த நிலையில், படுக்கையில், உயிரினைச் சற்றே பிரியலாமென்று என் மனம் சொன்னது; அது எனக்கு பேராறுதலாய்ப் பட்டது. மனம், நம்மை ஆட்கொண்டால் அது மரணயாத்திரை; மனத்தை வெல்வதே வாழ்கை.”

“ எனக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் வாழ்கை அல்ல, ஆறுதல்! எனவே, நான் உயிரைப் பிடித்து இறுக்கி என்னுடலோடு நிறுத்திக் கொள்ள முட்டிக்கொண்டிருக்காமல், என் அத்தையின் கதறலையும் தாண்டி மரணத்தை அணைத்துக் கொள்ளவே நசை கொண்டிருந்தேன். கோரமான இந்த உலகின் முன்பு என் இயல்புகளோடுடனே கூட நான் அநாதரவாய் வாழத் தலைப்பட்டேன்; அன்று, இருந்த வலியின் நிலையில், நான் உயிர்பிழைத்திருந்தாலும் நான் இழக்கப்போகும் அங்கங்களின் விளைவுகளையும் எண்ணிய போது, உலகின் விழிகள் என்னை நீள்நாக்குடன், வெறித்த விழிகளுடனுமே வரவேற்றன.” வேகமாகப் பேசிக் கொண்டிருந்தான் ராம்சே உணர்ச்சிகளின்றி.

“ ஒரு புள்ளியில் வெண்ணிற துணியில் ஊரும் நீரினைப் போல, திரையினை விலக்கி ஒரு அறைக்குள் செல்லும் உணர்வினைப் பெற்றேன். புரிந்தது அத்தனையும்; என்னை நோக்கி, பொறுமையுடன் காத்திருந்த, அத்தை இசபெல்லை நோக்கி சொன்னேன் ‘ அத்தை! நான் பேசுவது கேட்கிறதா. நான் இறந்து விட்டேன். இனி, சென்று தங்கள் பிழைப்பைப் பாருங்கள்!’ அதைக் கூர்ந்து நோக்கிய அவள், அதிரும் கோணலான உதடோரத்துடனும், விழியைப் பிழிந்து வழிந்து கொண்டிருந்த லாக்ரிமல் நீருடனும் என்னருகில் வந்து ‘இல்லை, என் செல்லமே, தேனே, நீ இறக்கவில்லை, நீ பிழைத்துவிட்டாய்! விரைவிலேயே என்னுடன் வந்து சுகமாக வாழப் போகிறாய்’ என்று சொன்னவாறே, பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். அத்தனையும், என்னால் கேட்க முடிந்தாலும்,  ‘எனக்குப் புரிகிறது, எப்படி இதயம் கழண்டோடி தாவி வெளியேறும்படி அழுதாலும், மூளைவெடிக்குமளவிற்குத் துயர் கொண்டாலும், நான் இறந்து விட்டேன் என்பதை நீங்கள் மாற்றமுடியாது அத்தை’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் உணர்ச்சிகளற்று.”
அவ்வளவுதான் என்பது போல தன் நாற்காலியின் முனையிலிருந்து தன்னை உள்ளித்துக் கொண்டு, இலகுவாக சாய்ந்து அமர்ந்து கொண்டான் ராம்சே.

அவன் கூறிய அத்தனையையும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த கோதார்ட் முழுக்கவே அவனது ஒன்றோடு ஒன்று பின்னியிருந்த கைகளிலேயே தன் பார்வையைப் பதித்திருந்ததை உணர்ந்து உடன் தன் கைகளை கவனித்துத் தான் எப்போது அவனைப் போலவே நாற்காலி அமர்வின் முனைக்கு நகர்ந்து, தன் கைகளைப் பின்னிக் கொண்டோம் என்பதை எண்ணி வியந்திருக்கையிலேயே, தன் கைபிணைப்பில் இடது பெருவிரல் மேலே இறுதியாக இருப்பதைக் கண்டு, அவனுக்கு எந்த பெருவிரல் வெளியே இருந்திருக்கும் எனக் கேள்வி கொண்டு நினைவு மீட்டெடுக்க எவ்வளவு முயன்றும் இயலாமல் சிறுகுறுஞ்சோர்வுற்றார்.

மீண்டும் தன்னிலை மீட்டு, “ ஆனால், நீங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றீர்க்ள்; அல்லவா? இல்லை, இன்னும் அதை நீங்கள் உணரவில்லையா?” என்று வினவினார். இந்த கேள்வியின் எதிரொலியென தன் நெற்றியில் உண்டான சுருக்கங்களுடன் முதல் முறையாக எரிச்சலுடன் “இல்லை. இல்லை. நான் உயிருடன் இல்லை; ஏன் ஐயா, என்னை அவமதிக்கத்தான் என்னை அழைத்தீர்களா?” என்று அலறியவாறே அவரது பெயர்ப்பலகையைப் பார்த்து நுண்ணணுகி, “ மிஸ்டர். ஜூல்ஸ் கோதார்ட்!” என்று சொற்தடுக்கி நின்றான். “மன்னிக்கவும், ராம்சே அவர்களே, நிதானமாக அமருங்கள், தங்களை நான் அவமதிக்கவில்லை; மாறாக புரிந்து கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் உயிரோடிருப்பதாக நான் எப்போதும் இனி சுட்டமாட்டேன்.” என்று தான் சொன்னதை இரண்டாம் முறை சொன்னதாக பொருள்படுமாறு அவனைக் கண்ணொடு கண்ணோக்கி மேலும் , கீழுமென தலையசைத்தார்.

“ உங்களோடு ஒரு குறிப்பினைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன், நான் உங்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு கனமான மனதுடன் கிளம்பிய பிறகு, தங்கள் சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே, தங்களுக்கும் மேல்தளத்தில், இருக்கும் கடைசி அறையில் இன்னுமொரு சுவாரஸியமான நோயாளி இருப்பதை அறிந்து அவரைப் பற்றிய குறிப்புகளை எடுப்பதற்காக வந்திருந்தேன்; அவர் காத்தரீன், 38 வயது பெண்மணி; அவர் தீயில் சுடப்பட்டு தன் உடலின் முக்கிய பாகங்களை மெல்ல மெல்ல திறமையான மருத்துவர்களின் உதவியால் பாதுகாத்துக் கொண்டு, உயிர்பெற்றெழுந்தவர்”. கோதார்ட் தொடர்ந்தார்.

காத்தரீன், தன் உயிர் தன்னுடன் வந்து சேர்ந்ததுமே, முதலில் விழிதேடியது தன் கணவர் ஸ்டீவினைத்தான். தன் நா மீண்டும் மொழியின் சுவையை முதலில் அறிந்ததுமே அவள் சொன்ன வார்த்தை ‘ஸ்டீவ்’ என்பதைத்தான். அவர், தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதை அவள் அப்போது மறு மரிப்பிற்கீடாய் கருதினாள். மறுநாளே, அனைவரும் அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவளொரு, பெரிய கூட்டு குடும்பத்தின் ஒரு அங்கம்.

இதைச் சொல்லியதுமே நிமிர்ந்து நோக்கி, “ராம்சே, இதை சொல்வதன் மூலம், தங்களது தனிமையினை நான் ஏளனம் ஏதும் செய்ய விழையவில்லை; மாறாக, அந்தச் சூழலின் விவரணையை சொல்லத்தான் முயல்கிறேன்” என்றார் கோதார்ட்.

“ தனித்தீவில், கரையொதுங்கியவனை கடலலைகளை விட எவரும் ஏளனம் செய்துவிட முடியாது; நீங்கள் தொடருங்கள்” என்று சுருக்கமான பதிலைத் தந்து ராம்சே தான் அவரது கூற்றினை ஆர்வமுடன் கவனிப்பதையும் அறிவித்துக் கொண்டான்.

கோதார்ட் தொடர்ந்து, “ நானும், அந்த குடும்பத்தில் ஒருவரென, ஓரத்தில் அமர்ந்திருந்தேன் – என் நோக்கம் வெறும் குறிப்புகளெடுப்பது என்றபோதும், அவளைச் சூழ்ந்திருந்த அவளது குடும்பத்தாரது நோக்கம் என்னை மகிழ்வுறச்செய்தது. அனைவரும் சூழ்ந்திருக்க பாடல் பாடி, ஸ்டீவினை வரச் செய்து காத்தரீனுக்கு பூங்கொத்து தரவைப்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. மெல்ல பாடல் தொடங்கிய போதே, காத்தரீன் முழுதும் புரிந்து கொண்டவளாய் பேரானந்தம் கொள்வதன் முற்றத்திற்கு வந்திருந்தாள். எங்கே தன் உயிரின் ஒரு பாதி; தன் வாழ்வின் சரிபாதி என்று நோக்கி இருந்தவளை நோக்கி அழகிய, சீரான நடையுடன் அணுகிக் கொண்டிருந்த ஸ்டீவின் முகத்திலும் அதே அளவு காதலின் உக்கிரமும், மீள்வின் மகிழ்வும் நிலை கொண்டிருந்தது.”

அருகில் வந்து, தன் பூங்கொத்தினை அளித்த அவன் அவள் முகத்தினருகே வந்து அந்த செவ்வுதடுகளின் உலர்வை மாற்றிட வன்பாலையில் மழையென தன் உதடுகளை இணைத்திட நெருங்கினான். பளார், என வாளால் வீசியதென அவனை அறைந்து தள்ளினாள். ஒரே நொடியில், அவ்வறையின் அங்கங்கள் அனைவருமே மெளனத்தின் மேலாடையை அள்ளி போர்த்திக் கொண்டனர். அது இருளின் நிறத்திலிருந்தது; ஆனால், ஸ்டீவ் விடவில்லை, “ மன்னித்துக் கொள், என்னுயிரே, நீ கண்கள் திறந்து என்னைத் தேடிக் கொண்டிருக்கையில் நான் பார்க்க முடியவில்லை என்று கோபித்துக் கொள்ளாதே” என்று சொல்லி மீண்டும் அவளை அனைக்கப் பார்த்தான்.

“ நீ யார்?” என்றாள் சந்தேகமும் எரிச்சலும் கலந்த முகத்தோற்றத்தில்.

“…”

“ என் கணவனைப் போலவே, உருவமிட்டிருக்கும் நீ யார்? சொல்! எங்க என்னோட ஸ்டீவ்? ஏன் எல்லாரும் இப்பிடி ஏமாந்தீர்கள். இது என் ஸ்டீவ் இல்லை; இல்லை, நீங்க எல்லாருமே சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்கள்! என் ஸ்டீவ என்னடா பண்ண, நாய் மகனே” என்றெல்லாம் சொல்லி காத்தரீன் தன் வாழ்வில் மீண்டும் துன்பத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக எட்டுவைத்து பயணித்தாள்.

“என்னிடம் குடும்பத்தாரும், ஸ்டீவும் அவர்கள் பரஸ்பரம் எடுத்துக் கொண்ட நிழற்படங்களைக் காட்டி, அவள் மனதில் ஏற்பட்டிருக்கும், பிரச்சனையைச் சரிசெய்து தரவேண்டுமாறு மன்றாடினார்கள்.” சொல்லி முடித்த ஜூல்ஸ் தான் எழுந்து சென்று தன் அலமாரியிலிருந்து எடுத்து வந்த தன் (இருபதாம் தொகுதி என்று தலைப்பிட்டிருந்த) குறிப்பேட்டின், 25ம் பக்கத்தினை காட்டினார். அது காத்தரீன் பெய்ர்ட் என்ற தலைப்பில் பல புரியாத கலைச்சொற்களுடன் நிரம்பியிருந்தது.

“மனம் பல விதமான ஏமாற்றங்களைச் சந்திக்கிறது; பல விதமாக நம்மையும் ஏமாற்றுகிறது. யாரோ ஒருவர் வந்து நம் மனதைக் குழப்ப வேண்டியதில்லை; ஒருவரது மனம் என்பதைக் கணக்கில் கொள்ளும்போதும், அந்த மனதின் உரிமையாளனே யாரோ ஒருவனாகிவிடுகிறான்.”

“ உண்மையில் உன் மனம், வேகத்தைச் சரியாகக் கணக்கிட்டும், அதை வென்றும் கடந்தும் செல்லும் தன்னுணர்வை நுட்பமாகப் பெற்றிருக்கிறது. இதுவே, கணிதப்பாடத்திற்கான அடிப்படை ஆற்றல்; ஆனால், உன் வாழ்வின் ஆதாரத்திலேயே, நீ கணிதத்தில் ஞான சூன்யம் என எப்படியோ உன் மனத்தால் நிறுவப்பட்டிருக்கிறாய். அதை, ஏற்காத மனத்தின் மனம் உன்னை ஒரு வேகமான வண்டியோட்டியாக மாற்றியிருக்கிறது – இன்னும் சொல்லவேண்டுமெனில், வெற்றிகரமான, வேக வண்டியோட்டியாக!”  தன் வாழ்நாளின் மிக முக்கியமான தருணமாய் ராம்சேயைக் கருதவைத்து தன் உரையாடலின் முடிவிற்கு வந்திருந்தார் கோதார்ட்.

“ நீ! நேராக உன் அத்தை வீட்டிற்குச் சென்று, அவளோடு உரையாடு; மனத்தை வெல்ல நினைப்பதற்கு, அதைப் புரிந்து கொள்ள முனைவதே முதல் படி. அதை நிகழ்த்திப்பார்; அடுத்த வாரம், இதே நேரம் என்னை மீளச்சந்தி” “நீ உயிரோடிருக்கிறாய் என்று நான் – முன்பே சத்தியம் செய்தது போல – இனி எப்போதும் சொல்லமாட்டேன்” என்றவாறு கதவினைத் திறந்துவிட்டு, இலகுவாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த ராம்சேயைப் பார்த்துவிட்டு தன் கதவுகளை மூடி உள்ளே தாழிட்டார் கோதார்ட்.

தன் வலது உள்ளங்கையில், பந்தினை மூடிக்கொண்டு, அரைச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறே, தன் மனநழுவுதலை முயன்று கொண்டிருந்த போதே, உறக்கம் மெல்ல அவரைப் போர்த்த தொடங்கிடும் சில நுண்கணங்களுக்கு முன், தன்கனவுத் திரையில், வலது கையும், இடது கையும் பிண்ணிப்பிணைந்திருப்பதைக் கண்டபோது அது காத்தரீனின் கைகளெனப் பட்டது; அக்கைகளின் வலது பெருவிரல் வெளியே இறுதி விரலாய் இருந்ததைப் பார்த்ததும், தன் கைகளிலிருந்து பந்து விடுபடுவதையும், அது கிழே இருந்த வெண்கல சட்டியில் உருண்டு எழும் சத்தத்தையும், அதிர்ந்தவராக உணர்ந்து, சட்டென்று விழித்தார். வேகமாய், தன் குறிப்பேட்டைத் தேடிக்கொண்டிருந்தார்.

அது கிடைக்காமல் போகும் தோறும் அவரது பதற்றம் பெருகியது; ஒரு புள்ளியில், நின்று நினைவுகொள்கையில், அதை ராம்சே எடுத்துச் சென்றிருக்கலாம் என்று புரிந்தபோது, அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து கத்தினார். அவரது சத்தம் யாருக்கும் கேட்காதபடி, அவருடல் மட்டுமே துயில் கொள்ள தக்கவாறு அமைப்புடன் கூடியிருந்த அவரது அறையினைச் சுற்றி, நிலம் பெரும் பேராழியென சூழ்ந்து, விழுங்கிக் கொண்டிருந்தது.

திரைக்கதை நுட்பங்கள் – ஒரு புத்தக வெளியீடு.


இது எனது முதல் நூல். அச்சு ஊடகத்தில் வெளியிட பல பிரயத்தங்கள் மேற்கொண்டு, நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறேன். இதன், எதிர்வினைகளையும், நண்பர்களது பங்களிப்பையும் வெகுவாய் எதிர்நோக்குகிறேன். கீழ்காணும் சுட்டியினைத் தட்டி திரைக்கதை பற்றிய புரிதலுக்கான தமிழில் எழுதப்பட்ட, ஒரு முக்கியமான நூலினைப் பதிவிறக்கிக் கொள்ளவும்!

நன்றி!

சுட்டி :

http://www.mediafire.com/file/uopnbidwk8edkh3/Screenplay+Techniques+currently+drafting+Comfortable+book+size.pdf

வாசனைப் பொழுது.


சுவாசம் காற்றாகி விடுவதன் கணத்தைப் பற்றிய பவுல் கலானிதியின் நூலினை வாசித்துக் கொண்டிருக்கையில், பல இறப்புகளை மெலிதாக, நோயாளியின் குடும்பத்திற்கும் நோயாளிக்கும் புரிய வைக்க வேண்டிய பணியே, ஒவ்வொரு மருத்துவராலும் தலையான பணியாக கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தனது நுரையீரல் புற்று நோயினைக் கண்டறிந்த பின் தானடைந்த உளப்புரிதல்களை விளக்குவதன் அண்மை என்னை தீர்க்கமாய் மரணத்துடன் பிணைத்துப் பார்த்தது.

நானும், பவுலும் பல இடங்களில், பழக்கவழக்கங்களில் பணிபுரியும் வழிமுறைகளில், வழுவினை ஏற்றுக் கொண்டு கற்கும் குணங்களில் மட்டுமன்றி, மருத்துவ துறையில் ஒரு காலும், இலக்கியத்தில் மறுகாலும் வைத்து நிற்பதில் என பல இடங்களில் பொருந்தி திளைத்தோம். முதன்மையான வேறுபாடு எனச் சட்டென்று தோன்றியது- நான் இருக்கிறேன் என்பதே; அவர், தன் புற்றுநோயினை எதிர் கொண்ட படிநிலைகள் மிகவும் கவனிக்கத்தக்கது. பொதுவாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக அறிந்ததும் அனைவருக்கும் (ஏற்பின்மை – கோபம் – பேரம் – மனசிதைவு – ஏற்பு) வரும் படிநிலைகள் தனக்கு தலைகிழாக ஏற்பட்டதாக அவர் சொல்கிறார்.

நோயினை மீறி, அவர் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க நினைத்தும், முன்னேற எண்ணியும் தன் மனதைத் தொடர்ந்து திடமாக்க நினைக்கும் முயற்சிகள், எப்படி உடல்ரீதியான நோய்மையால், அவரை தீநிழலென பின்னிழுக்கின்றன என்பது, வலிதரும் உண்மையாகப் பதிவாகி இருக்கிறது இந்நூலில். அவரது அண்மையை அகமுணர்ந்ததில், ஏற்பட்ட களைப்பை விலக்கி, வாழ்வின் பொருளின்மையை படாரென்று உணர்ந்ததை மாற்றிக் கொள்ள புனைவு வாசிக்கலாமென நீர்க்கோலம் வாசித்தேன்.

அதில், புஷ்கரனின் தனிமைப்பாடு வந்தது. அவனது, தனிமை; அவன் கொள்ளும் சினம், அவன் தன் ஆடியைக் கண்டே கொள்ளும்  அச்சம்; நிழலை மட்டும் விரும்பும் நிலை என மெல்ல ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மனதின் வடிவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. அவன் திடீரென தனிமையை வெல்ல, ஒரு நாள் அறையிலிருந்து வெளியேறி ஆடையணி பூண்டு அரசவை நிகழ்ந்து ஒரே நாளில் நூற்றுகணக்கான பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து தன் தனிமையிலிருந்தே மீண்டான். ‘இவ்வளவுதானா?’ என்று நினைத்த போதே, மெல்ல களைப்பு வந்து அவனை சூழ்ந்து கொண்டது. மாலையில் நம்மை மணந்து கொள்ளும் இருளைப் போல. இது மீண்டும் என்னைப் பவுலின் போராட்டத்தை நினைவுமீட்க படுத்தியது.

வாழ்க்கை என்பதன் எதிர்ச்சொல் இறத்தல் அல்ல; மாறாக வாழாதிருத்தல் ! இறப்பு என்பது வாழ்க்கையின் அங்கம்; அநேகமாக முற்றுப்புள்ளி. வாழ்க்கையை அழகாய் எழுதி வைத்துப் போவது மட்டுமல்ல, முற்றுபுள்ளியை சரியான இடத்தில் வைத்துப் போகவேண்டியதும் – நம் கையில் இருந்தால் – சரியாக செய்ய வேண்டியது தலைபெருங்கடன்! அது, அத்தனை எதிர்பார்த்து வருவதல்ல; எந்நேரமும் வரலாம்; அதனால், ஒவ்வொரு வார்த்தையையும் முற்றுபுள்ளிக்கு முன் அழகாய் எழுதிட வேண்டும். வாழ்வோம், கசங்கி, நசுங்கி, கருகித் தீருமெனினும் பொங்கிப் பெருகி வாசனை வீசும் மலரென!

b130b912e85b2f165984f29a5fb02ef7df8c075b

கனவுகளின் இடுக்கில்


விரல்களின் இடைவெளிகளில் தலை கோதும் ஆற்றல் நிறைந்து வழிவதைப் போலவே இவ்வெளியின் ஒவ்வொரு பரிமாணமும் தன்னை எப்படியோ அர்த்தப்படுத்திக் கொள்கிறது. ஒரு உயிரினம், தன்னை ரசிக்க, தன்னைப் பெயரிட, தன்னை பூசிக்க இவ்விசும்பிற்குத் தேவைப்பட்டது. அப்படி ஒரு உயிரினம் இதுதான்  என மனிதனது கற்பனைத் திறன் வந்ததும் அது சிலிர்த்துக்கொண்டது. மனித மனம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் ஒன்று எப்படியும் ஒருங்கமைந்ததல்ல.

நான் என்ற சொல்லே ஒரு மாயைதான். நான் என்பது, நானல்லாத பல செல்களின் தொகுப்பு. அப்படிப்பட்ட ஒரு கற்பிதம் நமக்குத் தேவைப்படுகிறது.  இவ்வித மனவெல்லைகளைத் தாண்டிட  கொள்ளும் இயல்பை மனம் ஆதரித்த போது, கனவுகள் அவற்றிற்குத் தேவைப்பட்டன. அந்த கனவுகளின் கூறியலே நான் என்பது இல்லை என்பதன் வெளியீட்டு அடிப்படை. இப்படி ஆரம்பிக்கக் கூட வேண்டியதில்லை. கடவுள், மூட நம்பிக்கை, நாத்திகம், மொழி என தொடர்ந்து எதைக் கடந்திட நினைத்து ஆரம்பித்தாலும், இந்த இடத்தை வந்து சேர்வோம். ஒரு கலை மனம், தன் இலக்கென கொண்டிருப்பது இதைத்தான்.

ஆண்ட்ரெய் டார்காவ்ஸ்கியின் தி மிர்ரர்  திரைப்படத்தின் அளப்பரிய சாதனைகளுள் ஒன்றாக நான் எண்ணியது இதைத்தான். அதாவது, நான் என்பதே ஒரு கற்பிதம். இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சிகளில், அவள் அமர்ந்திருக்கும் ஒரு நீண்ட மரத்தடுப்பின் மேல், பேசிக்கொண்டே வந்து அமரும் அந்த மருத்துவர், அமர்ந்ததும் எடைதாங்காமல் முறிந்து கீழே விழுகிறது அந்த மரத்தடுப்பு. விழுந்ததும், அவர் கண்டது, தாவரங்கள் தொடர்பு கொள்ளும் என்ற உண்மையை. அவற்றிற்கும் மனிதனைப் போல பேசும் திறன் உண்டு என்ற ஒன்றை. என்ன, ஒரே வேறுபாடு அவற்றின் மொழி வேறு அவ்வளவே.

0-l7hz0sltgkihxetg

ஒரு கனவின் திசைகளை அத்தனை எளிதாக எவரும் காட்சி ஊடகத்தில் காட்டிவிட முடியாது. ஏன் கனவு முடிந்ததும் தன்னகத்தே அவற்றின் முழுமையை மீட்டெடுத்துவிட முடியாது. ஒரு முழு திரைப்படமும் கனவென, தன் கனவென, யாராலோ ஆரம்பிக்கப்பட்டு, அது திரையில் ஓடும் கனவாகி, பலரின் கனவாக உருமாறி, கனவுகள் வளர்ந்து, தேய்ந்து, ஆணாகி பெண்ணாகி குரலாகி, இறுதியில் தத்தம் கனவுகளாக வந்து சேர்ந்து விடுகிறது பார்வையாளர் அனைவருக்கும்.

காற்றின் மூலம் மரஞ்செடிகொடிகள் வார்த்தைகளைச் செய்து கொள்கின்றனவா, இல்லை மரஞ்செடிகொடிகள் காற்றைக் கிழித்துத் தன் கனவுகளைப் பேசிக்கொள்கின்றனவா. நாமும் கூட நம் குரல்வளையில் நுழையும் காற்றைச் சற்றே அகப்படுத்திக் கொண்டுதான் பேசித் தீர்க்கிறோம்.

தஸ்தாயேவ்ஸ்கியின் கனவுகளைப் பற்றிய விவரணைகள் கொண்ட குற்றமும் தண்டனையும் மற்றும் கரம்சோவ் சகோதரர்கள் ஆகியவற்றின் மூலமும், ‘நிரந்தர கணவன்’ என்னும் குறுநாவலில் வரும் பதற்றமிக்க ட்ருகோஸ்கியைப் போலவும் இல்லாமல், தன் கனவுகளை ஐம்பூதங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் ஒரு அலாதியான குழந்தையை இத்திரைப்படத்தின் காமிராவிற்க்குப் பின் என்னால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது.

கருப்பு வெள்ளையெனவும், தாயைத் தன் மனைவியெனவும், தன்னைத் தன் மகனெனவும், வெடிக்காத கைக்குண்டுகளை எறிந்து விளையாடவும் தவிக்கும் மனம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மெல்ல தன் விலங்குகளைக் களைந்து களைந்து கொண்டது என்றே எண்ணிடத் தோன்றுகிறது. ஒவ்வொரு விலங்குகளைக் களைந்து வெற்றிக் கூக்குரலிட என்னும் மனம், அவ்வெழுச்சிக்கு முன்னரே, இன்னும் பல விலங்குகளை தன் அத்தனை விரல்களிலும் ஏற்றுக் கொண்டுவிடும் பரிதாபத்தை நிலைக்கண்ணாடியில் தெரியும் தெளிவுடன் காணமுடிகிறது இக்கனவின் மூலம்.

டார்காவ்ஸ்கியின் சினிமாத்தனம் என்பது, ஒரு மேதையின் புள்ளியினையும், ஒரு கணக்கு போடும் மனதின் துல்லியத்தையும் தொட்டுவிடாமல் அசைந்து கொண்டே இருக்கும் ஓரு பெண்டுலம் என்று தோன்றுகிறது. சினிமாவின் அத்தனைச் சாத்தியங்களையும், சினிமாவின் இலக்கிய தன்மையையும், சுகானுபவத்தையும் தந்துவிட்டு, அண்ட்ரெ ருபலோவ் திரைப்படத்தின் போஸ்டரைப் போகிற போக்கில் ஒட்டிவிட்டு நம் கனவைத் தன் கனவென காட்டி பழிப்பு செய்யும் ஒரு துள்ளலையும், தன் தேசத்தை ஸ்ட்ராவைத்து உறிஞ்சும் நுண்மையுடன் உள்ளிழுத்து வைத்திருப்பதும் அந்த பெண்டுலத்தின் அசைவுக் கூறுகளுள் சில.

கனவுகளை வெறுத்து, பயந்து கனவுகளின் மீது சாயம் பூசப்பட்ட கண்றாவித்தனங்களை மட்டுமே சினிமா என பார்க்கப் பழகியிருக்கும் எவருக்கும் உகந்ததல்ல ; மாறாக கனவுகளின் இடுக்கில் உள்ள இடைவெளியில் உடல்கோதும் சுகத்தை உணரத்தெரிந்த கிறுக்கர்களுக்கான திரைப்படம் இது.

 

 

நீலத்தின் கதகதப்பு


அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்தபின் காதல் சரியான வழிதான், என்று கவிஞர் அறிவுமதி சொல்வார். இது பீறிடும் காதலின் அவஸ்தையை முழுமையாக அனுபவித்த அனைவருக்கும் ஒரே புள்ளியில் நிறைந்தும், தொலைந்தும் இருக்கும் காதலின் பண்பைச் சொல்லும். முதல் காதலுக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பிடம் உண்டு. காரணம், அதில் நிறைந்து கிடக்கும் அனுபவமின்மையே. அப்படி பல காதல் கதைகளைத் திரையுலகம் கண்டும் சொல்லியும் சலித்து கிடக்கிறது.

இந்நிலையில், ஒரு பாலினச் சேர்க்கையின் காதலை, முதல் காதலாக சொல்லிப் பார்க்கும் கதையோட்டம் ஒரு பெரும் சவாலாகத்தான் இருக்க முடியும். Blue is the Warmest Color திரைப்படம் அந்த சவாலை நோக்கி, வெகு துணிச்சலோடு பயணிக்கிறது. பாலியல் மீறல்களைப் பற்றிய படங்களில், திரைக்கதையின் அத்தனைச் சாத்தியங்களையும், கட்டுப்பாடுகளையும் கடந்த ஒரு திரைப்படமாக ‘And Your Mother Too’ திரைப்படத்தை மட்டுமே எண்ணியிருந்தேன். அதோடு இரண்டாவதாக இந்த படமும் இணைகிறது.

அடேல் என்ற அகபண்பாளி (introvert) வளரிளம் பெண்ணின் ஹார்மோன் அழுத்தத்திற்கும், அவள் மனத்தின் ஏக்கங்களுக்கும் உள்ள இடைவெளியில் கதைக்களம் துவங்குகிறது. தன் சக கல்லூரி மாணவனிடம் தன் முதல் கலவியை பரீட்சார்த்து பார்க்கையில் அவளுக்கு பெரிதும் முழுமை என ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவள் மனம் விலகியே இருக்கிறது அந்த ஆணிடமிருந்து. அவள் சாலையைக் கடக்கையில் என்றோ கண்ட, தலைக்கு நீலச்சாயம் பூசிய, ஒரு பெண்ணின் மீது முதல் பார்வையிலேயே ஒரு வித ஈர்ப்பு கொண்டாள் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

மூன்று மணிநேரம் நகரும் இந்த திரைப்படம், ஒரு பாலின காதலின் வளர்நிலைகளை, சமூக புறக்கணிப்புகளை, வாழ்வின் பயணப்படுதலோடு சொல்லிச் செல்கிறது.ஃப்ரென்ச் இலக்கியம் படிக்கும், அடேல் தன் கற்பனைத் திறம் பற்றியும், இலக்கிய பகுதிகளை ஆசிரியர் வெகு வெகுவாக விளக்கம் தருகையில் அது தன் கற்பனையைத் தடை செய்வதால், அந்த விதமான கல்வியை விரும்பவில்லை என்றும் சொல்வது, மெலிதாக அவள் எம்மா மீது கொள்ளும் காதலின் விதையென திரைக்கதையில் நெய்யப்பட்டுள்ளது.

எம்மா, அடேலை விட சற்று அதிக வயதானவளாகவும், பிடிவாதமாளவளாகவும் இருப்பது, முழுக்க இருவரையும் இரு துருவங்களாக, காட்டிச் செல்கிறது. எதிரெதிர் துருவங்களை இணைப்பதே காந்தம், மற்றும் காதலின் தத்துவம் என்பதை உணர்ந்து கதாபாத்திரங்கள் செழிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. எம்மா, கேளிக்கையிலும், சமூக தொடர்புகளிலும் ஆர்வமுள்ளவளாகத் தெரிந்தாலும் ஒருவித இழப்புணர்வு நிறைந்த கண்களுடனேயே தோற்றமளிக்கிறாள். அவளுக்கு, அடேலின் சிறுபிள்ளைத்தனமும், நட்பும் புத்துணர்வளிக்கிறது. அடெலுக்கு காரணமே தோன்றாமல், வேதி மூலக்கூறு உந்துதல் போல காதல் மட்டுமே எம்மா மேல் எஞ்சுகிறது.

Adele Exarchopoulos and Lea Seydoux in Blue is the Warmest Colour

இவ்விருவரும், முதலில் கலவி கொள்ளும் காட்சி, மிகவும் வெளிப்படையான காட்சியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு துணை நடிகர்கள் என்ற அளவிலேயே வந்து போகிறது. முழுக்க முழுக்க இந்த இரு முதன்மை கதாபாத்திரங்களும் நம்மை ஆக்கிரமிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் உருவாக்கிய அனைத்து க்ளோஸ் அப் காட்சிகளும் நம்மை அடேலின் உலகிற்கு வெகு அருகாமையில் இழுத்து செல்ல தவறவில்லை.

இயக்குநரது துணிச்சல், ஒளிப்பதிவாளரின் கவியுணர்வு சித்திரங்கள், முதன்மை கதாபாத்திரங்களின் வீரியம் தவிர, எளிமையான இசை நம் கண்களில் ததும்பும் கண்ணீரை கீழே விழவைக்கும் திறன் பெற்றது. மெல்லிய உணர்வுகள், காதலில் விரிசல்கள், புரிதலின்மை ஆகியவை தவிர்க்க முடியாமல் ஏற்படுகையில் எப்படி கனமான வலியைத் தருகிறது என்பதை வெற்றிகரமாக திரைப்படுத்திய இந்த திரைப்படம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம்.

ஒருவர் ஒரு பாலின அல்லது எதிர்பாலின அல்லது இருபாலின ஈர்ப்பு கொள்வதென்பது, அவர்களது மூளைக்குள் இருக்கும் உயர் வேதித் தொடர்புகளால் ஏற்படும் ஒரு தூண்டலின் அடிப்படை கொண்டவை. அதைப் புரிந்து கொண்ட இயக்குனர்  Abdellatif Kechiche அவர்கள் சினிமாவை இலக்கியமாகக் கொண்டவர்களின் இலக்குக்கு உகந்தவர். முதலில் இலக்கிய மாணவியாகவும், பின்னர் குழந்தை பள்ளி ஆசிரியையாகவும் பரிணமிக்கும் அடேலாக நடித்த அடேல் தன் புன்னகையாலும், கண்ணீராலும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பெறுகிறார். சினிமாவை இலக்கியமாகக் கொண்டாடுவதும், பொழுதுபோக்காகக் கொண்டாடுவதும் கூட உயர் வேதி அடிப்படையே. எனவே, விசிலடிச்சான் குஞ்சுகள், முக்கிய! காட்சிகளை மட்டும் ஓட்டி பார்த்துவிட்டு உறங்குவது நலம்.

Rise of the Planet of the apes (2011) ஒரு நுண்பார்வை.


Rise of the Planet of the apes (2011) ஒரு நுண்பார்வை.
மனித இனத்திற்கு தன் இனத்தைத் தவிர எந்த இனமும் ஊக்கம் பெரும் போது ஒரு இயல்பான கவலையும் பீதியும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதனடிப்படையிலேயே பல அறிவியல் புனைவு திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஏலியன்கள், வெளவால்கள், மம்மி வண்டுகள் என நீளும் இந்த பட்டியலில், மனித குரங்குகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் ஒரு புரட்சியின் ஐடியாவில் உருவான இந்த திரைப்படம் மிகவும் சுவரஸ்யமானது மட்டுமல்ல, முக்கியமானதாகவும் உள்ளது.
நண்பர்கள், பலரும் பலமுறை இந்த திரைப்படத்தைப் பற்றியும் அதில் வரும் சீசர் குரங்கின் கதாபாத்திரம் பற்றியும் வியந்து பல முறை பேசியுள்ளனர். இருந்தும் இந்த கட்டுரை நேரடியாக இந்த திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இந்த கதையிலிருக்கும் சில நுண்ணிய அம்சங்களை மட்டுமே பேசும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது.
எந்த கதையிலும் நெருக்கமான வில்லன்களை உருவாக்கும் போது அந்த திரைப்படம் வெகுவாக மக்களை ஈர்க்கிறது. காரணம் அந்த வில்லனோடு தன்னை எளிதில் எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. அந்த வில்லனை வெறுப்பதன் மூலம் தன்னைத் தானே வெறுத்து தன் தவறுகளை வெறுத்து மனம் இலகுவடைவதே அதில் இருக்கும் இன்பம்.
அது போல அறிவியல் புனைகதைகளில் வரும் ஏலியன் போன்ற வில்லன் பாத்திரங்களில் ஒரு நெருக்கம் இல்லாமல் போவது இயல்பே. அதை சமாளிக்க பிரம்மாண்ட காட்சிகளில் எழுத்தாளர் மெனக்கெட்டிருப்பார். ஆனால், இந்த திரைப்படத்தில் மனிதகுரங்குகளை மனித இனத்திற்கு எதிராக அலைய விடுவதால், நம் மூதாதையின் மீதான வெறுப்புகளுக்கும், நம் மீதான வெறுப்புகளுக்கும் (வழக்கமான திரைவில்லன் எஃபெக்ட் போலவே) வடிகாலாக இந்த படம் இருக்கிறது. இது இப்படத்தின் முதல் சிறப்பு.
இரண்டாவதாக, சீசரின் மூளையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் (Mutations) நிகழும் படிப்படியான, மொழித்திறன் நம் பல்லாயிரம் ஆண்டுகால வாழ்க்கையின் உருவகமாக உள்ளது. இப்படி சீசர் நம் மனித இனத்தின் முன்னோர்களின் வடிவமாக தோற்றமளிக்கிறான்.
ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிந்தனைப் புரட்சியால் மட்டுமே மனிதன் சாதாரண விலங்கு என்னும் நிலையிலிருந்து, இவ்வுலகை ஆளும் விலங்கு என்னும் நிலையை அடைந்தான். காரணம், அவனது மொழி. உண்மையில் மனிதந்தான் முதல் மொழியைக் கண்டறிந்தான் என்பது பொய். காரணம் எறும்பு, தேனி தொடங்கி யானை, திமிங்கலம் வரை ஏதோ ஒரு மொழியைப் பேசிக்கொள்கின்றன. மனிதன், முதலில் வாய்மொழியைக் கண்டறிந்தான் என்பதும் பொய்யே. காரணம் கிளிகளும், மனித குரங்குகளும் சில வகை சொற்களைத் தன் மொழியில் வாய்பேச்சாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.
ஆனால், மனிதன் வெல்ல காரணம், அவனது மொழி, இலகுத்தன்மை கொண்டதாகவும், கற்பனை என்னும் கூறினை முதலில் கொண்டதாகவும், பிறரைப் பற்றி உளவியலாக அறிய உதவும் ஒன்றாகவும் அவனால் வடிவமைக்கப்பட்டதே ஆகும். இந்த வகை மொழியால்தான் அவன் மிருகம் என்பதிலிருந்து சமூக மிருகம் என்ற நிலையை அடைந்தான்.
இந்த பண்பினைத்தான், இந்த திரைப்படம் அணுகுகிறது. சீசர் என்னும் நாயக, மனித குரங்கு மெல்ல மனிதன் பயன்படுத்தும் மொழியினைத் தன் கையகப்படுத்த தொடங்குகிறது. இதன் மூலம் ,அதன் கற்பனை மற்றும் கணக்கிடும் ஆற்றல் பெருகுகிறது. தவிர்க்கவே முடியாமல் அதன் சுய மரியாதை உணர்வு உருவாகி பெருக்கமடைகிறது. தன் இனத்திற்காக மனித இனத்துடன் போரிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்த திரைப்படத்தில், மிகச் சிறந்த காட்சியாக, சீசர் முதன் முதலில் பேசும் காட்சியைச் சொல்லாம். இந்த மொழியால் கிடைத்த நேர்மை, நன்றியுணர்வு, மனவலிமை மற்றும் கடைமையுணர்வு ஆகியவற்றிற்கிடையேயான போரட்டத்திற்கு சீசர் ஆளாவதை சிறப்பாக இந்த திரைப்படம் சொல்லி இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.
மூன்றாவது சிறப்பாக, மனித குரங்குகளின் வெவ்வேறு பாத்திர அமைப்புகள். உதாரணமாக, ஒரு காமெடி குரங்கு, ஒரு வில்லக் குரங்கு, ஒரு ஈகோ கொண்ட குரங்கு, இவையெல்லாம் கலவையாகக் கொண்ட குரங்குகள் என்ற கதாபாத்திரங்கள் மனிதனுக்கு வெகு நெருக்கமாக தோன்றுகிறது. இதனால், முழுவதும், சிரித்து, அழுது நம் உணர்வின் முழு அர்ப்பணிப்புடன் இந்த திரைப்படத்தை ரசிக்க முடிகிறது.
குரங்குகளின் வில்லத்தனம், நம் மொழியின் தோற்றத்தின் படிநிலைகள் மற்றும் கதாபாத்திர அமைப்புகள் இந்த மூன்றோடு தொழில்நுட்ப நேர்த்தியும் இணைந்து உருவானதே இந்த திரைப்படம்.
இன்று ஷெர்லாக் போன்ற உச்சகட்ட முளைக்கு வேலை தரும் திரைக்கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அளவிற்கு மனிதன் அல்லாத வேறொரு இனம், நம் மொழியின் முதல் சொல்லைக் கூட சுயமாக சொன்னால் நமக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை என்ற உணர்வைத் தரும் இந்த படத்தை மீள்பார்வை செய்ய வேண்டி இந்த பார்வையை பகிர்கிறேன்…
 rise-of-the-planet-of-the-apes-splash