சிந்தாதிவலை.

படைப்புகள்

சிந்தாதிவலை 01.

மனிதனின், ஏன் உயிரினங்களின் முழு முதல் உணர்வு அந்த மூன்றெழுத்து. அதுவன்றி எதுவுமில்லை. ஊக்கம், ஆக்கம், சிதைவு – என எதுவுமில்லை. அதை வெல்ல முனைவதும், அதை வெல்ல முயன்று தோற்பதும், அதற்க்கு அடங்கி நடப்பதும், அதற்க்கு அலங்காரம் செய்வதுமே வாழ்க்கை எனப் பெயர் பெற்றது. அது மேலோட்டமாய் தோன்றுகையில் இருள். ஆனால் உண்மையில் அது உயிரின் மனதின் அடி ஆழத்தில் எரியும் தீ! அந்த தீயினால் உண்டாகும் ஒளி ! அந்த தீ இல்லாத, அது பற்றாத எதுவும் ஜடமாகும். அந்த தீ குறையும் தோறும் நாம் சமநிலைக்கு அருகில் செல்கிறோம்.

அந்த தீ கனன்று மனதின் அத்துனை உணர்வுகளையும் அத்துனை பரிமாணங்களையும் அத்துனை ஆழ்நிகழ்வுகளையும் மெல்ல எரியூட்டி தன்னகத்தே வைத்துக்கொள்ளும் திறன் பெற்றது. காமம், உவகை, கண்ணீர், பெருமிதம், அயர்ச்சி, வளர்சிதை மாற்றம் என ஒன்றுவிடாமல் உள்ளமென்னும் மாயையை ஊடகமாக்கி அவற்றை தன் சுயத்திற்க்குள் வைத்துக்கொள்கிறது. அந்த தீ வடிவம் பயம் ! அந்த மூன்றெழுத்து பயம்.. பயமின்றி போனால் இந்த பூமி மற்ற அருகாமையிலுள்ள கோள்களைப் போல உயிரற்ற கோளமாக இருந்திருக்கும்.

நீரின்றி அமையாது உலகு. அஞ்சுவது இன்றி அமையாது உயிர்கள். ஏன் கடல் நீரே தன் இருப்பை அஞ்சித்தான் அலைகளாக தொடர்ந்து தன் அகத்தின் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நிலவின் அச்சம் அதன் கறை. நித்திரையின் அச்சம் கனவு. நிலத்தின் அச்சம் நிலநடுக்கம். வானத்தின் அச்சம் நீலம். கவிதையின் அச்சம் பூடகம். நிறத்தின் அச்சம் கருமை. விழிகளின் அச்சம் சிமிட்டல். விரகத்தின் அச்சம் வியர்வை. தோல்வியின் அச்சம் குழப்பம். வெற்றியின் அச்சம் கொண்டாட்டம். அச்சத்தின் அச்சம் புன்னகை.

அத்தனை உயிர்களையும் அஞ்சுவதில் மிஞ்சி நிற்பவன் மனிதன். எந்த ஒரு விலங்கும் தன் அச்சத்தை மறைக்க முற்படுவதில்லை. தன் அச்சத்தை மறைக்க ஒரு கட்டுமானத்தை தன் குழுவிற்க்குள் ஏற்படுத்திக்கொள்வதில்லை. ஆனால் மனிதன் நாகரீகம் என்ற ஒரு இமையை உடல் முழுக்க போர்த்திக் கொண்டான். அதனால் தான் அச்சமில்லாதவன் என்று சொல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அச்சம் என்பது ஒரு ஆற்றல்.அச்சம் என்பது ஒரு ஆற்றல். அந்த ஆற்றல் ‘தனக்கு அச்சமில்லை என்று கோஷமிடுவதால் மட்டும் மறைந்து விடுவதிலை. அது கோஷங்களின் இடைவெளியில் பரவி அவனை அழுத்தத்தில் விடுகிறது. அவனது தமனி சிரைகளோடு விளையாடத் தொடங்குகிறது.

எந்த ஒரு மிருகமும் நச்சுமுள் காலில் தைத்தாலும், பயந்து அலறுவதில்லை. எந்த ஒரு மிருகமும் இருமல் வந்ததும் வைத்தியரிடம் ஓடுவதில்லை. எந்த ஒரு மிருகத்திற்க்கும் வனாந்திரத்தில் இருளின் அடர்த்தியில் தெரு விளக்கு தேவைப்படுவதில்லை.எந்த ஒரு மிருகமும் சாவை எண்ணி வாழ்வைத் தொலைப்பதில்லை. ஏனென்றால் அவை பயத்தைத் தன் நண்பனாக ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால் `பயமறியான்` என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் மனிதன் – தன் காலில் பட்ட சிராய்ப்பைக் கண்டு, தன் மகவிற்க்கு வந்த ஜுரத்தைக் கண்டு, தன் குழுவிற்க்கு வந்த எதிரியைக் கண்டு, தன் மனைவியின் நகைப்பைக் கண்டு, கயிற்றைப் பாம்பெனக் கண்டு, இருளின் முடிவின்மையைக் கண்டு, – என ஒவ்வொரு நொடியிலும் பயத்தை அறிகிறான். பயத்திடம் தோற்கிறான்.

ஏன் உலகமே ஒரு மதலையை வரவேற்றுக் காத்திருக்கிறது. உலகமே அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு தர தயாராக இருக்கிறது. அந்த நிலையிலும் பிறந்த குழந்த பயத்தால் அழுகிறது. பயம் விலகிச் செல்ல விலகிச் செல்ல நம்மை ஆக்கிரமிக்கும் நெருப்பு. அப்படி பிறக்கும் போதே பயங்கொள்ள வேண்டுமென நம் பரிணாம வளர்ச்சி நம் ஜீன்களுக்குப் பழக்கிச் சென்றிருக்கிறது. கோயிலில் கண்ட காமசிற்பங்களை வெளியே வெறுத்தாலும் உள்ளே காமுறும் பேதைப் பெண் போல நாம் வெறுக்கும் தோறூம் பயம் நம் மீது அதிகம் ஊடுருவுகிறது.

ஜனனம் பயமென்றால், மரணம் மாளா பயம். அழுதாலும் புரண்டாலும் மாண்டவர் மீள்வதில்லை. இருந்தாலும் அழுபவர் தன் அழுகையை நிறுத்துவதில்லை. ஒரு கனம் அழுகையை நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் புரியும். நம்மை அழவைப்பது வாழ்ந்து முடித்தவரின் இறப்பல்ல. வாழ்கின்ற நம் இறப்பின் மீதான பயம். நிலையாமையைக் கண்டு வரும் அச்சம். மரணம் நம்மை இந்த உலகை விட மோசமான ஒரு இடத்தில் கொண்டு சேர்த்துவிடுமோ என்ற அச்சம். மரணம் ஒரு அரைகுறையாகத் திறக்கப்பட்ட கதவு. முழுதாக திறந்த அல்லது முழுதாக மூடப்பட்ட கதவிற்க்குப் பின் இருக்கும் இருளைவிட பாதிதிறந்த கதவு காட்டும் இருள் அதிக அச்சம் தருவது. பயமிழந்தவர் மாண்டவரே ! பயமிழத்தல் இறப்பே !

Space and Time

பிறப்பு இறப்பு இரண்டிலும் பயமே மேலோங்கி நிற்கிறது. இடைப்பட்ட வாழ்க்கை பயத்தின் சரடுகளால் பின்னப்பட்டிருக்கிறது. பயத்தால் முடையப்பட்ட கூடை நம் வாழ்க்கை. அதில் நிரப்பப்பட்ட பழங்கள், மலர்கள் நம் எச்ச உணர்வுகள். அறிவிலாத குழந்தை மட்டும் சற்றே வனவிலங்குகள் போல தன்னை பயத்தோடு இணைத்து அறிகிறது. பசிக்குத்தான் அழுகிறது அக்குழந்தை, ஆனால் பயத்தைக் கண்டு சிரிக்கிறது. சில ஆண்டுகளில் அறிவு ஒவ்வொரு செய்திகளாலும் நிரப்பப்படும் போது அச்சம் மெல்ல குழந்தையை ஆக்கிரமிக்கிறது.பயத்தை வெறுக்கும் நாம், நம்மை அறியாமல் குழந்தைகள் மனதில் பயத்தை விதைக்கிறோம். பேய்கள், இருள், குழந்தை திருடன், மீசைக்கார தாத்தா, போலீஸ், ஆசிரியர், பள்ளிக்கூடம் இவை அத்தனையையும் பயன்படுத்தில் பயத்தை விதைக்கிறோம். இது பயத்தின் ஊடுருவலுக்குச் சான்று. இது நம்மை பயம் நிழலென தொடர்வதற்க்கான ஆதாரம்.

முதிர்கன்னிக்கு தன் வாழ்வில் முத்தம் தரும் சுகம் கிடைக்காமல் போய்விடுமா என்ற பயம். முதல் முத்தம் தந்த சுகம் சில கணங்கள் நீங்கியதும் எப்போதும் இதே ஈரம் இவள் முத்தத்தில் இருக்குமா என்ற பயம். அவள் இல்லாத போது வரும் தனிமை அச்சம். அவள் இருக்கும்போது வரும் நெருக்கம் அச்சம். காமத்தின் தொடக்கம் தரும் அச்சம். வலியெண்ணம் தரும் அச்சம். அந்த அச்சத்தால் வரும் இன்பம். காமம் முடிந்ததும் வரும் இன்பம். . அந்த இன்பம் தரும் அச்சம். எங்கும் அச்சம், எதிலும் அச்சம். மற்றவை நொடிகளே தாங்கும். அச்சமே அச்சாணி. எங்கும் எதிலும் இருக்கும். ஒரு வகையில் இன்பம் என்பதே அச்சத்தின் மாறுவேடம்.

ஐம்புலன்களும் அச்சத்தின் சேவகர்கள். தான் கண்டறிந்த கண்டுபிடிப்பினாலேயே தானே அச்சம் கொள்கிறான் மனிதன். ரயிலின் சத்தம் செவி, கட்டிடத்தின் பிரம்மாண்டம் விழி வழி, உணவின் சுவை மாற்றம் நாவழி, அழுகிய வாயு மூக்கு வழி, உடலின் தீண்டல் மெய் வழி. ஏன் தனக்கு வரும் கடிதத்தை கண்டு கூட படிக்கும் முன் அச்சம் கொள்கிறான் மனிதன். அச்சம் தருவதால்தான் அதற்கு அஞ்சல் என்று பெயரிட்டானோ ?

ஆனால் அச்சமின்றி முன்னேற்றம் இல்லை. அச்சமின்றி வெற்றி இல்லை. அச்சமின்றி கல்வி இல்லை.அச்சமின்றி கவிதை இல்லை. அச்சமின்றி மனிதன் உருவாக்கிய கடவுள் இல்லை. ஏன் அச்சமின்றி கடவுள் தன்னை உருவாக்கியதாக எண்ணும் மனிதனே இல்லை. அச்சமின்றி உயிர்களில்லை. அச்சமின்றி அனைத்துமில்லை.

`டேய் ! ஆம்பள மாதிரி இரு! எத பார்த்தாலும் பயப்படாத ! ஒரு சின்ன கம்பளிப் பூச்சி அத பார்த்து ஏன் இப்டி நடுங்குற` யாமினி இன்பாவைப் பார்த்து கேட்கையில் அவள் முகத்தில் ஒரு சலிப்பும் இருந்தது. இன்பா ` நான் பயந்தேன்னு யார் உண்ட சொன்னா?` என்றான். இன்பாவிடம் ` உன் அஞ்சு விரலும் நடுங்குது. உன் கை இப்ப ஏன் கைக்குள்ளதான் இருக்கு. நீ சொல்லாட்டியும் அது சொல்லிடுச்சி` என்றாள். கூடாரத்திற்க்குள் இருந்த இருவரும் சின்ன அவசர ஒளியூட்டியின் வெளிச்சத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ` இல்லடி! இது முத முதலா ஒரு பொண்ணோட இப்டி நெருக்கமா, தனிமைல உட்கார்ந்திருக்குறதால வர ஃபீலிங் ! இது பயம் இல்ல காதல் ! `

`ம். மொகரகட்ட ! வழியாத, பயந்தாங்கொள்ளி, போ ! போய் உன் டெண்ட்ல தூங்கு. ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்தா கலாய்ப்பாங்க ! போய் தூங்கு ! நாளைக்கு ஏர்லியரா எழுந்து ட்ரக்கிங்க் போகனும் ! ` என்று அவனிடம் சொன்னாள். அவன் அவளை ஏக்கமாகப் பார்த்தவாறே அவள் உதட்டுச்சிரிப்பை பிடுங்குமாறு மெல்ல அருகே வர, அவள் தன் கைகளால் அவன் மார்பை நகர்த்திட முயன்றாள். உணமையில் அவள் நகர்த்தவில்லை. அவன் கழுத்திற்க்குக் கீழ் உள்ள முதல் பட்டனைச் சுற்றி அவன் சட்டையைப் பிடித்து அருகே இழுத்தாள்.

உதடுகள் செம்புலப் பெயல் நீர் போல கலந்திட்விருக்கும் தறுவாயில் அந்த சத்தம் கேட்டது. அந்த ட்ரக்கிங்கிற்க்கு கண்காணிப்பாளராக வந்திருந்த கல்லூரி பேராசிரியை ஜெனட் ` கம் ஆன்! ஜஸ்ட் எல்லாரும் அவங்க அவங்க டெண்ட்ல போய் படுங்க ! டைம் ஆயிடுச்சி ! டோண்ட் மேக் மைசெல்ஃப் ஹார்ஷ் !` என்று அலறினாள். தற்போது உண்மையிலேயே இன்பாவை யாமினி தள்ளிவிட்டாள். அனைவரும் தத்தம் இடங்களில் உறங்கினர்.

மலையிடை உச்சியில் ஒரு கிராமத்தில் இந்த கல்லூரி மாணவர்கள் ட்ரக்கிங் செல்ல ஒரு சரியான இடம் பார்த்து டெண்ட் அமைத்தனர். மறுநாள் காலை முதல் ட்ரக்கிங் நிகழப்போவதை நினைத்தவாறே இன்பா சற்றே பயத்துடன் படுத்து சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நினைவில் ஒரு வாரம் பின் சென்றான். ` ட்ரக்கிங்க்லாம் வேணாண்டி என் செல்ல யாமி குட்டி ! நாம் அதுக்கு போலனா லீவ் கெடக்கும். நாம வேண்ணா எங்க ஊர்ல ஒரு பழைய கோயில் இருக்கு. அங்க போய்டு வர்லாம். சோழர்கால கல்வெட்டுக்கள்லாம் இருக்கு அங்க` என்று வேண்டுகோள் விடுத்த பார்வையுடன் கேட்டான் இன்பா. `ஏன் பழைய கோயில் , பாழடஞ்ச மண்டபம். இத விட்ட ஒனக்கு ஒன்னுமே தெரியாதா? நாம ட்ரக்கிங் போறோம். இட்ஸ் ஜ்ஸ்ட் ஃப்ன். நீ பயப்படாத . நான் கூட இருப்பேன்` என்று பதிலளித்தாள்.

ஒரு வடிவிலாத, வரிசையிலாத எண்ணங்களின் நடுவே உறங்கிவிட்டான் இன்பா. பயம் விழித்துக்கொண்டது அவனிடம். அந்த பயம் தான் தனியாக விளையாட சோர்வுறும் போது துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்வது அதன் வழக்கம். அப்போது அது காலத்தை அழைத்தது. காலம் ஓடி வந்தான். அவன் தன் மொழியில் தனக்கும் ஒரே மாதிரி யுகம் யுகமாகச் சொட்டிக் கொண்டே இருப்பது, சோர்வளிக்கிறது என்று புலம்பினான். இருவரும் ஒரு திட்டம் தீட்டினர். சற்றே ஒரு மானுடன் வாழ்வில் விளையாடிப் பார்ப்பதென. அந்த முடிவு வந்ததுமே இருவருக்கும் மின்னலென மின்னி வந்த பெயர் இன்பாதான். இன்பழகன்.

இரவுறங்கட்டும். இரவில் அவனும் உறங்கட்டும். அவனுக்கென ஒரு கனம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. அவன் அந்த கனத்தில் அத்தனை உணர்வுகளையும் அடையும் வாழ்த்து பெற்றுவிட்டான். அவன் அந்த கனத்திற்க்காக தன்னை அறியாமல் காத்திருக்கிறான். அந்த கனமோ அவனை தன்னிடம் இணைத்துக் கொள்ள காத்திருக்கிறது. தன் உடல் கொண்டு தானே பயங்கொண்டது போல சுருங்கியது கம்பளிப்பூச்சி அவனது கூடாரத்தின் கூரையில் !

Leave a comment