வாசனைப் பொழுது.

முதல்வரி

சுவாசம் காற்றாகி விடுவதன் கணத்தைப் பற்றிய பவுல் கலானிதியின் நூலினை வாசித்துக் கொண்டிருக்கையில், பல இறப்புகளை மெலிதாக, நோயாளியின் குடும்பத்திற்கும் நோயாளிக்கும் புரிய வைக்க வேண்டிய பணியே, ஒவ்வொரு மருத்துவராலும் தலையான பணியாக கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தனது நுரையீரல் புற்று நோயினைக் கண்டறிந்த பின் தானடைந்த உளப்புரிதல்களை விளக்குவதன் அண்மை என்னை தீர்க்கமாய் மரணத்துடன் பிணைத்துப் பார்த்தது.

நானும், பவுலும் பல இடங்களில், பழக்கவழக்கங்களில் பணிபுரியும் வழிமுறைகளில், வழுவினை ஏற்றுக் கொண்டு கற்கும் குணங்களில் மட்டுமன்றி, மருத்துவ துறையில் ஒரு காலும், இலக்கியத்தில் மறுகாலும் வைத்து நிற்பதில் என பல இடங்களில் பொருந்தி திளைத்தோம். முதன்மையான வேறுபாடு எனச் சட்டென்று தோன்றியது- நான் இருக்கிறேன் என்பதே; அவர், தன் புற்றுநோயினை எதிர் கொண்ட படிநிலைகள் மிகவும் கவனிக்கத்தக்கது. பொதுவாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக அறிந்ததும் அனைவருக்கும் (ஏற்பின்மை – கோபம் – பேரம் – மனசிதைவு – ஏற்பு) வரும் படிநிலைகள் தனக்கு தலைகிழாக ஏற்பட்டதாக அவர் சொல்கிறார்.

நோயினை மீறி, அவர் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க நினைத்தும், முன்னேற எண்ணியும் தன் மனதைத் தொடர்ந்து திடமாக்க நினைக்கும் முயற்சிகள், எப்படி உடல்ரீதியான நோய்மையால், அவரை தீநிழலென பின்னிழுக்கின்றன என்பது, வலிதரும் உண்மையாகப் பதிவாகி இருக்கிறது இந்நூலில். அவரது அண்மையை அகமுணர்ந்ததில், ஏற்பட்ட களைப்பை விலக்கி, வாழ்வின் பொருளின்மையை படாரென்று உணர்ந்ததை மாற்றிக் கொள்ள புனைவு வாசிக்கலாமென நீர்க்கோலம் வாசித்தேன்.

அதில், புஷ்கரனின் தனிமைப்பாடு வந்தது. அவனது, தனிமை; அவன் கொள்ளும் சினம், அவன் தன் ஆடியைக் கண்டே கொள்ளும்  அச்சம்; நிழலை மட்டும் விரும்பும் நிலை என மெல்ல ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மனதின் வடிவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. அவன் திடீரென தனிமையை வெல்ல, ஒரு நாள் அறையிலிருந்து வெளியேறி ஆடையணி பூண்டு அரசவை நிகழ்ந்து ஒரே நாளில் நூற்றுகணக்கான பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து தன் தனிமையிலிருந்தே மீண்டான். ‘இவ்வளவுதானா?’ என்று நினைத்த போதே, மெல்ல களைப்பு வந்து அவனை சூழ்ந்து கொண்டது. மாலையில் நம்மை மணந்து கொள்ளும் இருளைப் போல. இது மீண்டும் என்னைப் பவுலின் போராட்டத்தை நினைவுமீட்க படுத்தியது.

வாழ்க்கை என்பதன் எதிர்ச்சொல் இறத்தல் அல்ல; மாறாக வாழாதிருத்தல் ! இறப்பு என்பது வாழ்க்கையின் அங்கம்; அநேகமாக முற்றுப்புள்ளி. வாழ்க்கையை அழகாய் எழுதி வைத்துப் போவது மட்டுமல்ல, முற்றுபுள்ளியை சரியான இடத்தில் வைத்துப் போகவேண்டியதும் – நம் கையில் இருந்தால் – சரியாக செய்ய வேண்டியது தலைபெருங்கடன்! அது, அத்தனை எதிர்பார்த்து வருவதல்ல; எந்நேரமும் வரலாம்; அதனால், ஒவ்வொரு வார்த்தையையும் முற்றுபுள்ளிக்கு முன் அழகாய் எழுதிட வேண்டும். வாழ்வோம், கசங்கி, நசுங்கி, கருகித் தீருமெனினும் பொங்கிப் பெருகி வாசனை வீசும் மலரென!

b130b912e85b2f165984f29a5fb02ef7df8c075b

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s