கனவுகளின் இடுக்கில்

வகைப்படுத்தப்படாதது

விரல்களின் இடைவெளிகளில் தலை கோதும் ஆற்றல் நிறைந்து வழிவதைப் போலவே இவ்வெளியின் ஒவ்வொரு பரிமாணமும் தன்னை எப்படியோ அர்த்தப்படுத்திக் கொள்கிறது. ஒரு உயிரினம், தன்னை ரசிக்க, தன்னைப் பெயரிட, தன்னை பூசிக்க இவ்விசும்பிற்குத் தேவைப்பட்டது. அப்படி ஒரு உயிரினம் இதுதான்  என மனிதனது கற்பனைத் திறன் வந்ததும் அது சிலிர்த்துக்கொண்டது. மனித மனம் என்று நாம் சொல்லிக் கொள்ளும் ஒன்று எப்படியும் ஒருங்கமைந்ததல்ல.

நான் என்ற சொல்லே ஒரு மாயைதான். நான் என்பது, நானல்லாத பல செல்களின் தொகுப்பு. அப்படிப்பட்ட ஒரு கற்பிதம் நமக்குத் தேவைப்படுகிறது.  இவ்வித மனவெல்லைகளைத் தாண்டிட  கொள்ளும் இயல்பை மனம் ஆதரித்த போது, கனவுகள் அவற்றிற்குத் தேவைப்பட்டன. அந்த கனவுகளின் கூறியலே நான் என்பது இல்லை என்பதன் வெளியீட்டு அடிப்படை. இப்படி ஆரம்பிக்கக் கூட வேண்டியதில்லை. கடவுள், மூட நம்பிக்கை, நாத்திகம், மொழி என தொடர்ந்து எதைக் கடந்திட நினைத்து ஆரம்பித்தாலும், இந்த இடத்தை வந்து சேர்வோம். ஒரு கலை மனம், தன் இலக்கென கொண்டிருப்பது இதைத்தான்.

ஆண்ட்ரெய் டார்காவ்ஸ்கியின் தி மிர்ரர்  திரைப்படத்தின் அளப்பரிய சாதனைகளுள் ஒன்றாக நான் எண்ணியது இதைத்தான். அதாவது, நான் என்பதே ஒரு கற்பிதம். இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சிகளில், அவள் அமர்ந்திருக்கும் ஒரு நீண்ட மரத்தடுப்பின் மேல், பேசிக்கொண்டே வந்து அமரும் அந்த மருத்துவர், அமர்ந்ததும் எடைதாங்காமல் முறிந்து கீழே விழுகிறது அந்த மரத்தடுப்பு. விழுந்ததும், அவர் கண்டது, தாவரங்கள் தொடர்பு கொள்ளும் என்ற உண்மையை. அவற்றிற்கும் மனிதனைப் போல பேசும் திறன் உண்டு என்ற ஒன்றை. என்ன, ஒரே வேறுபாடு அவற்றின் மொழி வேறு அவ்வளவே.

0-l7hz0sltgkihxetg

ஒரு கனவின் திசைகளை அத்தனை எளிதாக எவரும் காட்சி ஊடகத்தில் காட்டிவிட முடியாது. ஏன் கனவு முடிந்ததும் தன்னகத்தே அவற்றின் முழுமையை மீட்டெடுத்துவிட முடியாது. ஒரு முழு திரைப்படமும் கனவென, தன் கனவென, யாராலோ ஆரம்பிக்கப்பட்டு, அது திரையில் ஓடும் கனவாகி, பலரின் கனவாக உருமாறி, கனவுகள் வளர்ந்து, தேய்ந்து, ஆணாகி பெண்ணாகி குரலாகி, இறுதியில் தத்தம் கனவுகளாக வந்து சேர்ந்து விடுகிறது பார்வையாளர் அனைவருக்கும்.

காற்றின் மூலம் மரஞ்செடிகொடிகள் வார்த்தைகளைச் செய்து கொள்கின்றனவா, இல்லை மரஞ்செடிகொடிகள் காற்றைக் கிழித்துத் தன் கனவுகளைப் பேசிக்கொள்கின்றனவா. நாமும் கூட நம் குரல்வளையில் நுழையும் காற்றைச் சற்றே அகப்படுத்திக் கொண்டுதான் பேசித் தீர்க்கிறோம்.

தஸ்தாயேவ்ஸ்கியின் கனவுகளைப் பற்றிய விவரணைகள் கொண்ட குற்றமும் தண்டனையும் மற்றும் கரம்சோவ் சகோதரர்கள் ஆகியவற்றின் மூலமும், ‘நிரந்தர கணவன்’ என்னும் குறுநாவலில் வரும் பதற்றமிக்க ட்ருகோஸ்கியைப் போலவும் இல்லாமல், தன் கனவுகளை ஐம்பூதங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் ஒரு அலாதியான குழந்தையை இத்திரைப்படத்தின் காமிராவிற்க்குப் பின் என்னால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது.

கருப்பு வெள்ளையெனவும், தாயைத் தன் மனைவியெனவும், தன்னைத் தன் மகனெனவும், வெடிக்காத கைக்குண்டுகளை எறிந்து விளையாடவும் தவிக்கும் மனம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மெல்ல தன் விலங்குகளைக் களைந்து களைந்து கொண்டது என்றே எண்ணிடத் தோன்றுகிறது. ஒவ்வொரு விலங்குகளைக் களைந்து வெற்றிக் கூக்குரலிட என்னும் மனம், அவ்வெழுச்சிக்கு முன்னரே, இன்னும் பல விலங்குகளை தன் அத்தனை விரல்களிலும் ஏற்றுக் கொண்டுவிடும் பரிதாபத்தை நிலைக்கண்ணாடியில் தெரியும் தெளிவுடன் காணமுடிகிறது இக்கனவின் மூலம்.

டார்காவ்ஸ்கியின் சினிமாத்தனம் என்பது, ஒரு மேதையின் புள்ளியினையும், ஒரு கணக்கு போடும் மனதின் துல்லியத்தையும் தொட்டுவிடாமல் அசைந்து கொண்டே இருக்கும் ஓரு பெண்டுலம் என்று தோன்றுகிறது. சினிமாவின் அத்தனைச் சாத்தியங்களையும், சினிமாவின் இலக்கிய தன்மையையும், சுகானுபவத்தையும் தந்துவிட்டு, அண்ட்ரெ ருபலோவ் திரைப்படத்தின் போஸ்டரைப் போகிற போக்கில் ஒட்டிவிட்டு நம் கனவைத் தன் கனவென காட்டி பழிப்பு செய்யும் ஒரு துள்ளலையும், தன் தேசத்தை ஸ்ட்ராவைத்து உறிஞ்சும் நுண்மையுடன் உள்ளிழுத்து வைத்திருப்பதும் அந்த பெண்டுலத்தின் அசைவுக் கூறுகளுள் சில.

கனவுகளை வெறுத்து, பயந்து கனவுகளின் மீது சாயம் பூசப்பட்ட கண்றாவித்தனங்களை மட்டுமே சினிமா என பார்க்கப் பழகியிருக்கும் எவருக்கும் உகந்ததல்ல ; மாறாக கனவுகளின் இடுக்கில் உள்ள இடைவெளியில் உடல்கோதும் சுகத்தை உணரத்தெரிந்த கிறுக்கர்களுக்கான திரைப்படம் இது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s