நீலத்தின் கதகதப்பு

சினிமா

அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்தபின் காதல் சரியான வழிதான், என்று கவிஞர் அறிவுமதி சொல்வார். இது பீறிடும் காதலின் அவஸ்தையை முழுமையாக அனுபவித்த அனைவருக்கும் ஒரே புள்ளியில் நிறைந்தும், தொலைந்தும் இருக்கும் காதலின் பண்பைச் சொல்லும். முதல் காதலுக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பிடம் உண்டு. காரணம், அதில் நிறைந்து கிடக்கும் அனுபவமின்மையே. அப்படி பல காதல் கதைகளைத் திரையுலகம் கண்டும் சொல்லியும் சலித்து கிடக்கிறது.

இந்நிலையில், ஒரு பாலினச் சேர்க்கையின் காதலை, முதல் காதலாக சொல்லிப் பார்க்கும் கதையோட்டம் ஒரு பெரும் சவாலாகத்தான் இருக்க முடியும். Blue is the Warmest Color திரைப்படம் அந்த சவாலை நோக்கி, வெகு துணிச்சலோடு பயணிக்கிறது. பாலியல் மீறல்களைப் பற்றிய படங்களில், திரைக்கதையின் அத்தனைச் சாத்தியங்களையும், கட்டுப்பாடுகளையும் கடந்த ஒரு திரைப்படமாக ‘And Your Mother Too’ திரைப்படத்தை மட்டுமே எண்ணியிருந்தேன். அதோடு இரண்டாவதாக இந்த படமும் இணைகிறது.

அடேல் என்ற அகபண்பாளி (introvert) வளரிளம் பெண்ணின் ஹார்மோன் அழுத்தத்திற்கும், அவள் மனத்தின் ஏக்கங்களுக்கும் உள்ள இடைவெளியில் கதைக்களம் துவங்குகிறது. தன் சக கல்லூரி மாணவனிடம் தன் முதல் கலவியை பரீட்சார்த்து பார்க்கையில் அவளுக்கு பெரிதும் முழுமை என ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவள் மனம் விலகியே இருக்கிறது அந்த ஆணிடமிருந்து. அவள் சாலையைக் கடக்கையில் என்றோ கண்ட, தலைக்கு நீலச்சாயம் பூசிய, ஒரு பெண்ணின் மீது முதல் பார்வையிலேயே ஒரு வித ஈர்ப்பு கொண்டாள் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

மூன்று மணிநேரம் நகரும் இந்த திரைப்படம், ஒரு பாலின காதலின் வளர்நிலைகளை, சமூக புறக்கணிப்புகளை, வாழ்வின் பயணப்படுதலோடு சொல்லிச் செல்கிறது.ஃப்ரென்ச் இலக்கியம் படிக்கும், அடேல் தன் கற்பனைத் திறம் பற்றியும், இலக்கிய பகுதிகளை ஆசிரியர் வெகு வெகுவாக விளக்கம் தருகையில் அது தன் கற்பனையைத் தடை செய்வதால், அந்த விதமான கல்வியை விரும்பவில்லை என்றும் சொல்வது, மெலிதாக அவள் எம்மா மீது கொள்ளும் காதலின் விதையென திரைக்கதையில் நெய்யப்பட்டுள்ளது.

எம்மா, அடேலை விட சற்று அதிக வயதானவளாகவும், பிடிவாதமாளவளாகவும் இருப்பது, முழுக்க இருவரையும் இரு துருவங்களாக, காட்டிச் செல்கிறது. எதிரெதிர் துருவங்களை இணைப்பதே காந்தம், மற்றும் காதலின் தத்துவம் என்பதை உணர்ந்து கதாபாத்திரங்கள் செழிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. எம்மா, கேளிக்கையிலும், சமூக தொடர்புகளிலும் ஆர்வமுள்ளவளாகத் தெரிந்தாலும் ஒருவித இழப்புணர்வு நிறைந்த கண்களுடனேயே தோற்றமளிக்கிறாள். அவளுக்கு, அடேலின் சிறுபிள்ளைத்தனமும், நட்பும் புத்துணர்வளிக்கிறது. அடெலுக்கு காரணமே தோன்றாமல், வேதி மூலக்கூறு உந்துதல் போல காதல் மட்டுமே எம்மா மேல் எஞ்சுகிறது.

Adele Exarchopoulos and Lea Seydoux in Blue is the Warmest Colour

இவ்விருவரும், முதலில் கலவி கொள்ளும் காட்சி, மிகவும் வெளிப்படையான காட்சியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு துணை நடிகர்கள் என்ற அளவிலேயே வந்து போகிறது. முழுக்க முழுக்க இந்த இரு முதன்மை கதாபாத்திரங்களும் நம்மை ஆக்கிரமிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் உருவாக்கிய அனைத்து க்ளோஸ் அப் காட்சிகளும் நம்மை அடேலின் உலகிற்கு வெகு அருகாமையில் இழுத்து செல்ல தவறவில்லை.

இயக்குநரது துணிச்சல், ஒளிப்பதிவாளரின் கவியுணர்வு சித்திரங்கள், முதன்மை கதாபாத்திரங்களின் வீரியம் தவிர, எளிமையான இசை நம் கண்களில் ததும்பும் கண்ணீரை கீழே விழவைக்கும் திறன் பெற்றது. மெல்லிய உணர்வுகள், காதலில் விரிசல்கள், புரிதலின்மை ஆகியவை தவிர்க்க முடியாமல் ஏற்படுகையில் எப்படி கனமான வலியைத் தருகிறது என்பதை வெற்றிகரமாக திரைப்படுத்திய இந்த திரைப்படம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம்.

ஒருவர் ஒரு பாலின அல்லது எதிர்பாலின அல்லது இருபாலின ஈர்ப்பு கொள்வதென்பது, அவர்களது மூளைக்குள் இருக்கும் உயர் வேதித் தொடர்புகளால் ஏற்படும் ஒரு தூண்டலின் அடிப்படை கொண்டவை. அதைப் புரிந்து கொண்ட இயக்குனர்  Abdellatif Kechiche அவர்கள் சினிமாவை இலக்கியமாகக் கொண்டவர்களின் இலக்குக்கு உகந்தவர். முதலில் இலக்கிய மாணவியாகவும், பின்னர் குழந்தை பள்ளி ஆசிரியையாகவும் பரிணமிக்கும் அடேலாக நடித்த அடேல் தன் புன்னகையாலும், கண்ணீராலும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பெறுகிறார். சினிமாவை இலக்கியமாகக் கொண்டாடுவதும், பொழுதுபோக்காகக் கொண்டாடுவதும் கூட உயர் வேதி அடிப்படையே. எனவே, விசிலடிச்சான் குஞ்சுகள், முக்கிய! காட்சிகளை மட்டும் ஓட்டி பார்த்துவிட்டு உறங்குவது நலம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s