Rise of the Planet of the apes (2011) ஒரு நுண்பார்வை.

வகைப்படுத்தப்படாதது

Rise of the Planet of the apes (2011) ஒரு நுண்பார்வை.
மனித இனத்திற்கு தன் இனத்தைத் தவிர எந்த இனமும் ஊக்கம் பெரும் போது ஒரு இயல்பான கவலையும் பீதியும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதனடிப்படையிலேயே பல அறிவியல் புனைவு திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஏலியன்கள், வெளவால்கள், மம்மி வண்டுகள் என நீளும் இந்த பட்டியலில், மனித குரங்குகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் ஒரு புரட்சியின் ஐடியாவில் உருவான இந்த திரைப்படம் மிகவும் சுவரஸ்யமானது மட்டுமல்ல, முக்கியமானதாகவும் உள்ளது.
நண்பர்கள், பலரும் பலமுறை இந்த திரைப்படத்தைப் பற்றியும் அதில் வரும் சீசர் குரங்கின் கதாபாத்திரம் பற்றியும் வியந்து பல முறை பேசியுள்ளனர். இருந்தும் இந்த கட்டுரை நேரடியாக இந்த திரைப்படத்தைப் பற்றி பேசாமல் இந்த கதையிலிருக்கும் சில நுண்ணிய அம்சங்களை மட்டுமே பேசும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது.
எந்த கதையிலும் நெருக்கமான வில்லன்களை உருவாக்கும் போது அந்த திரைப்படம் வெகுவாக மக்களை ஈர்க்கிறது. காரணம் அந்த வில்லனோடு தன்னை எளிதில் எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. அந்த வில்லனை வெறுப்பதன் மூலம் தன்னைத் தானே வெறுத்து தன் தவறுகளை வெறுத்து மனம் இலகுவடைவதே அதில் இருக்கும் இன்பம்.
அது போல அறிவியல் புனைகதைகளில் வரும் ஏலியன் போன்ற வில்லன் பாத்திரங்களில் ஒரு நெருக்கம் இல்லாமல் போவது இயல்பே. அதை சமாளிக்க பிரம்மாண்ட காட்சிகளில் எழுத்தாளர் மெனக்கெட்டிருப்பார். ஆனால், இந்த திரைப்படத்தில் மனிதகுரங்குகளை மனித இனத்திற்கு எதிராக அலைய விடுவதால், நம் மூதாதையின் மீதான வெறுப்புகளுக்கும், நம் மீதான வெறுப்புகளுக்கும் (வழக்கமான திரைவில்லன் எஃபெக்ட் போலவே) வடிகாலாக இந்த படம் இருக்கிறது. இது இப்படத்தின் முதல் சிறப்பு.
இரண்டாவதாக, சீசரின் மூளையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் (Mutations) நிகழும் படிப்படியான, மொழித்திறன் நம் பல்லாயிரம் ஆண்டுகால வாழ்க்கையின் உருவகமாக உள்ளது. இப்படி சீசர் நம் மனித இனத்தின் முன்னோர்களின் வடிவமாக தோற்றமளிக்கிறான்.
ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிந்தனைப் புரட்சியால் மட்டுமே மனிதன் சாதாரண விலங்கு என்னும் நிலையிலிருந்து, இவ்வுலகை ஆளும் விலங்கு என்னும் நிலையை அடைந்தான். காரணம், அவனது மொழி. உண்மையில் மனிதந்தான் முதல் மொழியைக் கண்டறிந்தான் என்பது பொய். காரணம் எறும்பு, தேனி தொடங்கி யானை, திமிங்கலம் வரை ஏதோ ஒரு மொழியைப் பேசிக்கொள்கின்றன. மனிதன், முதலில் வாய்மொழியைக் கண்டறிந்தான் என்பதும் பொய்யே. காரணம் கிளிகளும், மனித குரங்குகளும் சில வகை சொற்களைத் தன் மொழியில் வாய்பேச்சாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.
ஆனால், மனிதன் வெல்ல காரணம், அவனது மொழி, இலகுத்தன்மை கொண்டதாகவும், கற்பனை என்னும் கூறினை முதலில் கொண்டதாகவும், பிறரைப் பற்றி உளவியலாக அறிய உதவும் ஒன்றாகவும் அவனால் வடிவமைக்கப்பட்டதே ஆகும். இந்த வகை மொழியால்தான் அவன் மிருகம் என்பதிலிருந்து சமூக மிருகம் என்ற நிலையை அடைந்தான்.
இந்த பண்பினைத்தான், இந்த திரைப்படம் அணுகுகிறது. சீசர் என்னும் நாயக, மனித குரங்கு மெல்ல மனிதன் பயன்படுத்தும் மொழியினைத் தன் கையகப்படுத்த தொடங்குகிறது. இதன் மூலம் ,அதன் கற்பனை மற்றும் கணக்கிடும் ஆற்றல் பெருகுகிறது. தவிர்க்கவே முடியாமல் அதன் சுய மரியாதை உணர்வு உருவாகி பெருக்கமடைகிறது. தன் இனத்திற்காக மனித இனத்துடன் போரிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்த திரைப்படத்தில், மிகச் சிறந்த காட்சியாக, சீசர் முதன் முதலில் பேசும் காட்சியைச் சொல்லாம். இந்த மொழியால் கிடைத்த நேர்மை, நன்றியுணர்வு, மனவலிமை மற்றும் கடைமையுணர்வு ஆகியவற்றிற்கிடையேயான போரட்டத்திற்கு சீசர் ஆளாவதை சிறப்பாக இந்த திரைப்படம் சொல்லி இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.
மூன்றாவது சிறப்பாக, மனித குரங்குகளின் வெவ்வேறு பாத்திர அமைப்புகள். உதாரணமாக, ஒரு காமெடி குரங்கு, ஒரு வில்லக் குரங்கு, ஒரு ஈகோ கொண்ட குரங்கு, இவையெல்லாம் கலவையாகக் கொண்ட குரங்குகள் என்ற கதாபாத்திரங்கள் மனிதனுக்கு வெகு நெருக்கமாக தோன்றுகிறது. இதனால், முழுவதும், சிரித்து, அழுது நம் உணர்வின் முழு அர்ப்பணிப்புடன் இந்த திரைப்படத்தை ரசிக்க முடிகிறது.
குரங்குகளின் வில்லத்தனம், நம் மொழியின் தோற்றத்தின் படிநிலைகள் மற்றும் கதாபாத்திர அமைப்புகள் இந்த மூன்றோடு தொழில்நுட்ப நேர்த்தியும் இணைந்து உருவானதே இந்த திரைப்படம்.
இன்று ஷெர்லாக் போன்ற உச்சகட்ட முளைக்கு வேலை தரும் திரைக்கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அளவிற்கு மனிதன் அல்லாத வேறொரு இனம், நம் மொழியின் முதல் சொல்லைக் கூட சுயமாக சொன்னால் நமக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை என்ற உணர்வைத் தரும் இந்த படத்தை மீள்பார்வை செய்ய வேண்டி இந்த பார்வையை பகிர்கிறேன்…
 rise-of-the-planet-of-the-apes-splash
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s