கமல்ஹாசன் என்னும் பொறுக்கி.

சினிமா

கமல்ஹாசனது ரசிகர்கள் பல வகை. அவற்றுள் முதன்மையானது முன்று வகைகள்.
முதல் வகை. கமல்ஹாசனை ஒரு காதல் தேவனாக, அழகின் அடையாளமாக ரசிப்பவர்கள். கமல்ஹாசனை தன் கனவுலகின் நாயகனாக ரசிப்பவர்கள். எனவே இயல்பாகவே இந்த வகையில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆண்கள் கூட இந்த வகையில் இல்லாமல் இல்லை. ஆண்களும் அவரை ஒரு அழகு நாயகனாகக் காணவே விழைகிறார்கள். இவர்கள் பல நேரங்களில் கமல்ஹாசனின் பகுத்தறிவு, சமூகக் கொள்கைகள் மீது மெலிதான ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ‘கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் சாமி இல்லன்னு சொல்றத நான் ஏத்துக்கமாட்டேன்’ போன்ற பேச்சுகள் பேசுபவர்கள் அவர்கள். அவர்கள் உண்மையில் தன் மனதின் ஆழத்தை சுய பரிசீலனை போதுமான அளவு செய்யதவர்கள் என்றே தோன்றுகிறது.
அவ்வை சண்முகி திரைப்படத்தின் இறுதி காட்சியில் தான் பாண்டிதான் என்று முழங்காலளவு நீரில் மீனாவிடம் தன்னைக் கமல்ஹாசன் நிரூபிக்கும் காட்சியை ரசித்திருப்பீர்கள். அதில் மீனா ‘அதே உதடு’ என்று சொல்லும்போதே, கமல்ஹாசன் ‘அதே கைரேக’ என்று சொல்லி தன் கைரேகைகளைக் காட்டுவார். இந்த முதல் வகை ரசிகர்கள் மீனாவைப் போல உதட்டழகனாக, முத்தத்தின் வித்தகனாக கமல்ஹாசனைப் பார்ப்பவர்கள். அவர்களிடம் கமல்ஹாசன் தான் தன் கைரேகையைக் காட்டி தன்னை, தானும் வெறும் கைரேகையில் மாறுபடும் மனிதன் தான் என்பதைக் காட்டிக் கொள்வது போலவும், கைரேகையை ஆராயும் நுண்ணிய கண்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்பது போலவும் எனக்குத் தோன்றியது.
இந்த முதல் வகை ரசிகர்களால்தான் கமல்ஹாசனின் பிம்பம் ரகசியமாக, கிருஷ்ணனை, காமனை, உலகின் காதல் அரசர்களை ரசிப்பது போல ஒரு இனிமையான உருவகமாக்கி உருட்டி திரட்டி தன் மனதில் வைத்துக் கொண்டு ரசிக்கும், அசைபோடும் நிலை ஏற்பட்டது. இவர்களை இம்சித்து கொண்டிருந்திருக்கிறார் கமல்ஹாசன் பல பத்தாண்டுகளாக. இருப்பினும், இந்நிலை போதுமென்று இருந்திருக்கலாம். இந்த போதுமென்ற மனம் எப்போதும் கலைத் தாகம் கொண்டவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, இந்த இடங்களில் அவர் சொல்ல விழைவது. நான் அழகாவது உங்கள் கற்பனையால், என்பதை.
kamal_380
இரண்டாவது, வகை ரசிகர்கள், கமல்ஹாசனை அவரது தனித்தன்மையை ரசிப்பவர்கள். இந்த தனித்தன்மை அவரிடம் எப்படி வந்தது என்று சிந்தித்தால், சினிமாதுறையில் பெரும்பான்மையானோருக்கு மண்டையில் உரைக்காத உழைப்பின் தாகம் கமல்ஹாசனிடம் நிரம்பி கிடப்பதே என்பது எவருக்கும் புரியும்.
இந்த இரண்டாம் வகை ரசிகர்கள் கொண்டாட்டகாரர்கள். இவர்கள், கமல்ஹாசனை ரசிப்பது மட்டுமல்லாமல், ரஜினியைத் திட்டுவதையும் காணமுடியும். இது, தேவையில்லைதான் என்று தோன்றினாலும், நிகழும் என்பதே எதார்த்தம். ஒரு மனிதனுக்குள் அமைதி, கோபம், குரோதம், கனிவு என எதிரெதிர் துருவங்கள் நிறைந்திருப்பது போலவும், ஒருவிழி நோய் , மறுவிழி மருந்து என்று காதலியை வள்ளுவர் வர்ணிப்பது போலவும், இந்த நிலை, இந்த வகை கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் இருந்தே தீரும்.
இவர்கள், கமல்ஹாசனுக்கு விசிலடிச்சான் குஞ்சுகள். கமல் இவர்களை உசுப்பேற்றி விட்டு, தன் போஸ்டர் கட் அவுட்களுக்கு பாலூற்றுவதை ஊக்குவிக்காமல், மாறாக அவர்களை முடிந்தவரை சமூகப் பணிகள் செய்யும் அங்கமாக மாற்றிக் கொண்டார். இத்தனை உயரத்தில் இருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம், இப்படி ஒரு எண்ணத்தை தைரியமாக தேர்ந்தெடுத்ததாக ஒரேயொரு நபரை கூட இந்திய, குறிப்பாக தமிழ்ச்சூழலில் இன்றளவும் சுட்டிக்காட்டிவிட முடியாது.
இப்படித்தான், இந்த இரண்டுவகை ரசிகர்களுக்குள் ஒருவித தொடர் உரையாடலை சினிமா மூலமும் தன் பேச்சுகள் மூலமும் தன் உழைப்பின் மூலமும் நிகழ்த்தி கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். இதன் மூலம் அவர் என்ன எத்தனிக்கிறார். அவர் தன் ரசிகர்களிடமிருந்தும், சினிமா ரசிகர்களிடமிருந்தும், ஒரு சில அல்லது சில பல தரமான ரசிகர்களை பொறுக்கி எடுக்கிறார். அவர்கள் மூலம் ஒரு தரமான கலைப்படைப்புகளை ஆக்கும், எதிர்நோக்கும் தன் சமூக கலைக் கனவினைப் பெரிதாக்கிக் கொள்கிறார்.
தான் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலித் திரையை அடித்துடைக்க பல கைகளை துணை கோருகிறார்; தனக்கு கைவலிப்பதால் அல்ல; திரைச்சுவரின் நீள அகலங்கள் பெரிதாக இருப்பதால். இப்படி அவர் உருவாக்கிய ரசிகர்கள்தான் மூன்றாம் வகை ரசிகர்கள். இவர்கள், கமல்ஹாசனை ஆழிந்து அணுகி, கற்று, ரசிப்பவர்கள். கமல்ஹாசனின் தோல்விகளையும், தன் பாடங்களாகக் கொள்பவர்கள். இவர்களை நோக்கித்தான், அல்லது இவர்களை எதிர்நோக்கித்தான் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார் பெரும் நம்பிக்கையுடன்.
ஆளவந்தான் திரைப்படத்தில் ஸ்கீஸோபினியாவின் ஆழத்தை உருவாக்கியது இவர்களுக்காகத்தான். ஹேராமில் ‘கத்தியவார் குதிரை’ யைச் சுடும் காட்சியை வைத்ததும் இவர்களுக்காகத்தான். வசூல் ராஜாவில் காமெடியையும் தாண்டி தனிமனித சுதந்திரத்தை நக்கலாக பேசிச் செல்வதும் இவர்களுக்காகத்தான். அல்லது இவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கத்தான். இப்படி ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சில முத்துக்களைப் பொறுக்கிடத்தான் தன்னை இறைத்துக் கொள்கிறார், கமல்ஹாசன்.
இவை ஒருவிதத்தில் வகைகள். மறுபடி நோக்கினால் இவை நிலைகள் பல படங்களில்.கமல்ஹாசனைக் காதலித்து முதல் வகையைக் கடந்து, ஆளவந்தானில் விசிலடித்து மனதின் மூலக்கூறுகளைக் கிளர்ச்சிபெறச் செய்து இரண்டாம் நிலையையும் தாண்டி, கமலோடு அமர்ந்து பேச விழையும் விழைவோடு, அதற்கான தகுதியையும் வளர்த்துக் கொள்ளும் மூன்றாம் நிலையை நோக்குகிறேன்.
அது என்றும் முடிவிலாதது.கதைகளில் வரும் உலகளந்த பெருமாளின் மூன்றாம் அடி நோக்குவது போன்றது.

Leave a comment