சேப்பியன்களின் வரலாறு.

விமர்சனம்

வரலாற்று புத்தகங்கள் தரும் பாடங்களும் குறிப்புகளும் மனித இனத்தின் ஒவ்வொரு காலகட்டத்தின் மனநிலையைப் பற்றி தெரிவிப்பதனாலேயே அவை இயல்பாகவே ஒரு சாகசகதை போல நம்மில் சுவார்ஸ்யத்தை ஏற்றிவிடுகிறது. மனித இனம் நம்மை – ஹோமோ சேப்பியன்களை – மட்டுமே கொண்ட ஒரு இனமல்ல. இந்த ஹோமோ என்னும் பேரினத்தின் ஒரு சிற்றினம் மட்டுமே அது.

இருப்பினும், இந்த இனம் உலகின் ஏதோ ஒரு கடைக்கோடியில் தோன்றி எப்போதோ இயற்கைத் தேர்வில் தேர்வு செய்யப்படாமல் அழிந்து போயிருக்க வேண்டிய சாத்தியக்கூறுகளின் அலைகளுக்கிடையில் மெல்ல ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறது. அதைத் தாண்டி இன்று உலகின் முதன்மையான, உலகை ஆளுகின்ற, உலகை ஆராய்கின்ற ஒரு உச்ச இனமாக உருவாகியும் இருக்கிறது. இவ்வினத்தின் 70,000 ஆண்டுகளுக்கான வரலாற்றை ஒரு நூல் பேசினால் அது எப்படிப்பட்ட சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டதாக இருக்கும் என்று ஊகம் செய்வது அத்தனைக் கடினமல்ல.

இருப்பினும் மேற்சொன்ன அதே காரணத்திற்காகவே எழுதப்படும் ஒரு நூல், சுவாரஸ்யத்தை சொல்லமுடியாமல் அதீத கலைச்சொற்கள் கொண்ட ஏழு அல்லது எட்டு தொகுப்புகள் கொண்ட உலகின் முக்கிய நூலகங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டிய நூலாகவும் அது எழுதப்பட முடியும். ஆனால், யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) – 500 பக்கங்களுக்கும் குறைவான – தனது நூலில் (Sapiens – A brief history of humankind) பல சுவாரஸ்யமான, தொடர் கேள்விகளை எழுப்பிக்கொண்டே செல்லும், உளவியலின் மூலம் விரிவாக்கப்பட்ட வியப்பின் சாதகங்களைக் கொண்டு நிறைந்திருக்கிறது.

Sapiens_A_Brief_History_of_Humankind.jpg

இந்நூல், உலகின் பல துறைகளின் வரலாற்றையும் -கடந்த 70,000 ஆண்டுகளுக்கான – தொட்டு அலசிச் செல்வதால் – தன் அறிவின் துணை கொண்டு பெற்றுள்ள முன்முடிவுகளை இலகுவாக்கிக் கொள்ளத் தயங்குபவர்களுக்கும், அபுனைவு நூல்களில் ஒரு புனைவினைப் பொருத்தி பார்த்து கற்பனை மூலம் ஆசிரியரின் தேடல்களுக்கு துணைபோக தெரியாதவர்களுக்கும், வரலாற்றை தரவுகள் மற்றும் அரசவம்சவழிகளின் தொடர்ச்சியாகவும் படிக்க மட்டுமே அடர்விருப்பு கொண்டவர்களுக்கும் ஒரு தடையாக – பயனற்ற காகிதத் துண்டங்களாகத் தெரியலாம்.

புத்தகத்தின் தலைப்பில் சொல்லப்பட்டது போல இது மனித இனத்தின் வரலாறாக மட்டும் இல்லாமல் – இன்னும் சொல்லபோனால் இது பல இடங்களில் வரலாற்று நூலாகவே இல்லை – மனித இனத்தின் உளவியல், மாபெரும் உன்னதங்கள் என தோற்றமளிக்கும் நிறுவனங்களின் உண்மை நிலை, அறிவியலின் பல பாதம் பதியாத தடங்களின் விவரங்கள் என பலவாறு பரப்பனுகி பேசுகிறது.

மனித இனம் சேப்பியன்கள் மட்டுமன்றி, ஏழெட்டு மனித இனங்களோடு கூடவே வாழ்ந்திருக்கிறது. ஆனால், அவை அனைத்தையும் அழிவிற்க்கு தள்ளியோ அல்லது இயற்கைத் தேர்விற்குப் பலிகொடுத்தோ நம் இனம் மட்டும் இன்றுவரை வாழும் ஒரு வெற்றியை – நூலினை முடிக்கையில் இது வெற்றியா என்பதன் மீது சந்தேகம் எழுவது உறுதி – நாம் அடைந்திருக்கிறோம். இதற்கு காரணம் நம் மூளையின் அளவு பெரியதாயிருந்ததே. அத்தனை விலங்கினங்களும் – நம் ஹோமோ பேரினத்தின் சகோதரர்கள் உள்பட – தனது இரத்த ஓட்டத்தைப் பெரிதும் தன் தசைகளுக்கும், வயிற்று செரிமானங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சேப்பியன்கள் மட்டும் பெரிதும் தன் மூளைக்கு தன் ரத்தஓட்டத்தைத் திருப்பிக் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் பலவீனமானவர்களாக மாறினாலும், மூளையின் அபரிமிதமான ஆற்றல் மனிதனை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அவனால் நேரடியாக சிங்கம் புலிகளிடம் சண்டையிட முடியாமல் போயிருந்தாலும், அவன் மூளையின் சிந்தனையைக் கொண்டு அவற்றைத் தூரத்திலிருந்து கொல்லும் திறன் கொண்ட அத்தனை ஆயுதங்களையும் படைக்கும் திறன் பெற்றான்.

ஹோமோ நியாண்டர்தால் என்ற சக மனித இனமோ, சேப்பியன்களை விட தசைவலிவுடையவர்களாகவும்,  பெரிய மூளைகளைக் கொண்டிருந்த இனத்தினராகவும், கடும் குளிரைத் தாங்கும் இனத்தவராகவும் இருந்தனர். இருந்தாலும், சேப்பியன்களால் தோற்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிந்த இனமாகினர். காரணமாக ஆசிரியர் குறிப்பிடுவது சேப்பியன்களின் மொழியினை!

நிச்சயமாக சேப்பியன்களின் மொழி உலகின் முதல் மொழி அல்ல. பெரும்பாலான விலங்கினங்களுக்கு, குறிப்பாக நம் நெருங்கிய உறவினர்களான சிம்பன்சிகளுக்கு மொழியினை – சைகைகளாகவோ, ஒலித்தொடர்களாகவோ, தொடுதல் மூலமாகவோ – பயன்படுத்தும் திறன் இருந்துள்ளது. இருப்பினும் சேப்பியன்கள் வெகு வெற்றிகரமான விலங்காக – தன் எதிரிகளை எளிதில் வீழ்த்த பயன்படுத்தப்படும் உத்திகளுக்கு கருவியாக இருந்த – உருமாற காரணமாக இருந்த அந்த மொழியின் தனித்தன்மையை ஆசிரியர் விவரிக்கையில் ஏற்படும் வியப்பு இனிமையானது.

முதலில், சேப்பியன்களின் மொழி வெகு இலகுவானது, அது எந்த ஒரு ஒலியையும் பயன்படுத்திக் கொண்டு பல விதமான தொடர்களை உருவாக்கும் வகையை ஏற்படுத்தியது.  இரண்டாவது, மொழிகளின் மூலம் அரட்டை அடிப்பது. அரட்டையே சேப்பியன்கள் வெகுவாக ஒன்று திரள காரணமாக அமைந்ததாக ஆசிரியர் நிறுவுகிறார். இன்று , பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள் வரை இந்நிலையே தொடர்வதை நாம் காண்கிறோம். மூன்றாவதாக, கற்பனையை உருவாக்கும் மொழி. இதன் மூலம் இல்லாத ஒன்றை கற்பனை செய்தல் என்ற ஒரு புனைவு மொழியை மனிதன் உருவாக்குகிறான். அவனால், எதையும் கதைகளின் மூலம், உள்ளே புகுத்தி தன் மூளைக்குள் அசைபோடவும், நியூரான்களைத் தூண்டி தன் சதிகளுக்கு உதவிடவும் வைக்க முடிகிறது. இதுவே மனித இனத்தின் சிந்தனைப் புரட்சிக்கு அடிப்படையாகிறது.

இப்படி, ஒவ்வொரு பக்கங்களிலும், பத்திகளிலும், சிந்தனைப் புரட்சிகளைத் தொடர்ந்து, சோர்வின்றி, சோர்வேற்படுத்தா வண்ணம் இந்நூல் வெளிப்படுத்துகிறது. சேப்பியன் இனத்தின் முதல் புரட்சியான சிந்தனைப் புரட்சியில் தொடங்கி, 12,000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வேளாண்மைப் புரட்சியின் முக்கியத்துவத்தைப் பேசிவிட்டு, கடந்த ஐநூறாண்டுகளாக உலகில் நாம் நிகழ்த்திவரும் அறிவியல் புரட்சியின் நுணுக்கங்களைப் பேசும் முன் மனித இனத்தின் ஒருங்கிணைவிற்க்கான காரணங்களையும் ஒரு பகுதியில் பேசுகிறது இந்நூல்.

நாம் மனித இனத்தைப் பற்றிக் கொண்டிருந்த அத்தனை முன் எண்ணங்களையும் தூக்கிவீச தயாராக இருந்துகொண்டு இந்த நூலினை அணுக வேண்டும் என்ற சிந்தனையுடன் செல்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s