மனம் கவர்ந்த சூப்பர்ஹீரோக்கள்

வகைப்படுத்தப்படாதது

2

உருமாற்றம்.

ஒரு சூப்பர் ஹீரோ சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறுவது பெரும்பாலான கதைகளில் இருந்து வருகிறது. இதற்கு சில விதிவிலக்கும் உண்டு. ஏனெனில் சில சூப்பர் ஹீரோக்கள் பிறப்பிலேயே விசேஷ சக்தியுடன் பிறப்பதுண்டு. ஆனால் உண்மையில் சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறும் கதைகள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. காரணம் நம்மால் அந்த நாயகனுடன் நம்மை உருவகித்துக் கொள்ள, அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இந்த உருமாற்ற பகுதி வெகு அழகாக எல்லா சூப்பர் ஹீரோ படங்களிலும் தற்போது காட்சியமைக்கப்படுகிறது . இதற்கு முக்கிய அடித்தளமாக சாம் ரைமியின் ஸ்பைடர்மேன் திரைப்படமே இருந்து வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இதிலிருந்துதான் பின்னர் வந்த பெரும்பாலான சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் திரைக்கதை சொல்லும் விதத்திலும், கதாபாத்திர வடிவமைப்புகளிலும் பல மாற்றங்கள் வந்தது. நோலனின் பேட்மேன் ட்ரையாலஜியை வெகுவாக சாம் ரைமியின் ஸ்பைடர் மேன் ட்ரையாலஜியுடன் ஒப்பிட முடியும். அது வேறொரு கட்டுரையில் என்னால் எழுதப்படலாம்.

இங்கு ஒரு சில குறிப்பிட்ட படங்களில் ஒரு சாதாரண நாயகன் சூப்பர் ஹீரோவாக உருமாற்றம் பெறும் இடங்களையும் அவற்றின் ஒற்றுமைகளையும் குறிப்பிட எண்ணுகிறேன். முக்கியமான பிரசித்தி பெற்ற சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், பேட்மேன் மற்றும் அயர்ன்மேனை எடுத்துக் கொள்கிறேன் சில அடிப்படைகளை விளக்க.

உருமாற்றத்தின் படிகள்

  1. ஒரு தூண்டும் நிகழ்ச்சி : இது நாயகனை ஏதோ ஒரு விதத்தில், உடல் ரீதியாகவோ (ஸ்பைடர் மேனில் வரும் பூச்சி கடி), மன ரீதியாகவோ (பேட்மேன் பிகின்ஸ்ல் வருவது போல நாயகனின் செயல் தவறென நாயகி தெரிவிக்கும் காட்சி போலவோ), நிகழ்ச்சியின் அடிப்படையிலோ (அயன் மேன் படத்தில் தான் உருவாக்கிய ஆயுதங்களால் ஏற்பட இருக்கும் அழிவைக் காண்பது போலவோ) இருக்கலாம். இது ஒரு மெல்லிய விதை போல நாயகனின் உள்ளே இருந்து வரும்.கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த விதை அவனை மாபெரும் ஆற்றல் கொண்டவனாக மாற்றும். இதைத் தொடர்ந்து அவன் எடுக்கும் அறம் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் அவனை சூப்பர் ஹீரோவாக ஆக்குகிறது.
  2. இழப்பும் வலியும் : ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் தனக்கு அத்தனையும் செய்து வாழ்வைக் கற்றுத் தந்த தன் அங்கிளை இழக்கிறான் நாயகன். பேட்மேன் திரைப்படத்தில் தன் பெற்றோரைக் கண்முன்னே இழக்கிறான் சிறுவயது ப்ரூஸ் வெய்ன். இந்த இருவருமே தன் நெருங்கியவர்களின் இழப்பிற்குத் தானே காரணம் என்று மனம் நோகின்றார்கள். அயர்ன் மேனில் வரும் டோனி ஸ்டார்க்கோ தன் தந்தையை இழந்து அதன் வலியிலிருந்து மறைந்து கொள்ள தன் வாழ்வை ஊதாரித்தனமாக நிகழ்த்துகிறான். ஆனால் இவர்கள் தனக்கு ஏற்பட்ட வலி பிறருக்கு ஏற்படக் கூடாது என்பதை தன் அடிப்படை அறமாக்கிக் கொள்கிறார்கள். பேட்மேன் – சூப்பர்மேன் டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படத்தில் சூப்பர்மேனைக் கொல்ல விரும்பும் பேட்மேன், அவன் தாயைக் காக்க வேண்டிய நிலையை அறிந்ததும் சூப்பர்மேனைக் காக்கிறான்.
  3. பரிசோதனைகள் : தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறோமா இல்லை ஒரு நோயாளியாக மாறிக் கொண்டிருக்கிறோமா என்ற ஒரு குழப்ப நிலையில் நாயகன் தத்தளிக்கிறான். இதை பொது உலகில் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. இதனால் அவன் தானே சில பரிசோதனைகளைச் செய்ய முனைகிறான். இந்த முதல், அனுபவமற்ற பரிசோதனைகளில் அவனுக்கு சின்ன சின்ன வெற்றிகள், சின்ன சின்ன அடிகள் ஏற்படுகின்றன. தன் ஆற்றலை ஒரு சிறு குழந்தை மிதிவண்டி பழகுவதைப் போல அவன் பழகுகிறான்.
  4. உடை வடிவமைப்பு : ஒரு சூப்பர் ஹீரோ மக்களுக்கு அவன் உடையின் மூலம் அடையாளம் காணப்படுகிறான். சூப்பர் வில்லன்களும் அப்படியே. ஒரு சூப்பர் ஹீரோவிற்கு முதல் முதல் உடை வடிவமைக்கப்படும் காட்சிகள் மிகவும் மனம் கவர்பவை. ஸ்பைடர்மேனில் தானே வடிவமைக்கிறான். பேட்மேனில் எஞ்சீனியரின் துணையுடனும், அயர்ன் மேனில் தானே எஞ்சினியர் என்பதால் தனியாகவும் நாயகர்கள் உடையை வடிவமைக்கின்றனர். இந்த உடையும் கொஞ்ச கொஞ்சமாக மேம்படுத்தப்படுகிறது தொடர்ந்து வரும் காட்சிகளில்.
  5. புரியாது குழம்பும் மக்கள் : முதல் முறையாக வெளியே இறங்கி மக்களைக் காக்க வரும் சூப்பர் ஹீரோவிற்கு வில்லன்களை விட பொதுமக்களும் போலீசும் அதிக தொந்தரவு தருவது நடக்கும். இவர்களையும் தாண்டி அந்த தீமையைத் தடுக்கும் போதுதான் ஸ்பைடர்மேன், பேட்மேன் உருவாகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s